முதலில் மோசடி புகார்..இப்போ வரி ஏய்ப்பு சிக்கல்..வசமாக மாட்டிக்கொண்ட கூலி பட நடிகர்
கடந்த சில மாதங்களுக்கு முன் மோசடி புகாரில் மாட்டிக்கொண்ட மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் சவுமின் சாஹிர், தற்போது வரி ஏய்ப்பு சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார். ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வரும் இவருக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சவுபின் சாஹிர். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
வருமான வரித்துறை ரெய்டு
மஞ்சுமெல் பாயஸ் படத்தை தயாரித்ததில் பண மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், வருமான வரித்துறையினர் நடிகர் சவுமின் சாஹிருக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் வருமான வரி செலுத்துவதில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு உண்மையாக செலவு செய்த தொகையை மறைத்து ரூ. 22 கோடி என கணக்கு காண்பித்து அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்களான சவுமின் சாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கேரளா ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.
பண மோசடி புகார்
பான் இந்தியா அளவில் பேசப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சவுமின் சாஹிர், அந்த படத்தை தனது பரவா பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இதையடுத்து ரூ. 18 கோடி பட்ஜெட்டில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்காக ரூ. 7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறிய நிலையில், சொன்னபடி பணத்தை தரவில்லை என்று சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து சவுபின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனியின் வங்கிக் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இவர்கள் மீது மரடு பகுதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
மஞ்சுமெல் பாய்ஸ் படம் சூப்பர் ஹிட்டானதுடன் ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஆனால் படத்துக்காக முதலீடு செய்த தனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என சிராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக நடந்த விசாரணையில் தற்போது வரி ஏய்ப்பு நடந்திருப்பது வரை தெரியவந்துள்ளது. இதனால் சவுமின் சாஹிர் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.
கூலி படத்தில் சவுமின் சாஹிர்
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சாத்தான் குழியில் சிக்கிக்கொண்டிருக்கும் தனது நண்பனை, தனது உயிரையும் பொருப்படுத்தாமல் காப்பாற்றும் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார் சவுமின் சாஹிர்.
இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கும் இவர், தயால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தில் இவரது லுக்கின் போஸ்டரும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. கூலி படத்தில் பிஸியாக நடித்து வரும் இந்த நேரத்தில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியிருப்பது மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்ச்சையில் சிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்கள்
கொச்சியில் போதை பொருளுடன் கேங்ஸ்டர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிசாசு பட நடிகை பிரயாகா மார்டின், மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாஸி ஆகியோரின் பெயர் அடிபட்டது. இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்துகொண்டிருந்த, முகமது பஹீம் என்பவர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றதாக போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இவரை தொடர்ந்து தற்போது மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சவுமின் சாஹிர் வரி ஏய்ப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகர் ஸ்ரீநாத் பாஸிதான் டெவில்ஸ் கிச்சன் என்ற குழிக்குள் விழும் நபராக படத்தில் நடித்திருப்பார். அவரை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்த சவுமின் சாஹிர் தற்போது சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டுள்ளார்.
டாபிக்ஸ்