Manjummel Boys: உலக நாயகனுடன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் - தட்டிக்கொடுத்து கமல் உற்சாகம்!
நடிகர் கமல்ஹாசனை, மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளப் படக்குழுவினர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டிலும் நன்கு ஓடிக்கொண்டிருக்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’திரைப்படத்தின் படக்குழுவினர், கமல்ஹாசனையும் இயக்குநர் சந்தான பாரதியையும் சந்தித்து ஆசிபெற்றனர்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம், மஞ்சுமெல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நேரடியாக மலையாளத்தில் வெளியான இத்திரைப்படம், கேரளத்தைத் தாண்டி தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் மஞ்சுமெல் பாய்ஸ் குறித்த பேச்சு தான் அதிகரிக்கிறது. காரணம், இப்படம் டிராவல் ஆவது தமிழ்நாட்டில். அதனால் பாதிபேர் படத்தில் நேரடியாக தமிழில் பேசுகின்றனர்.
கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மஞ்சுமேல் என்னும் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் சிலர், கூட்டமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர்.
அப்போது குணா குகை எனப்படும், இக்கட்டான பாறை குகையில் சிலர் மாட்டிக்கொள்கின்றனர். அவர்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதை மலையாளப் படங்களுக்கே உண்டான கதை சொல்லும் பாங்குடன் நகைச்சுவையுடன் அதே நேரம் திரில்லாகவும் சொன்ன படம் தான், மஞ்சுமெல் பாய்ஸ்.
படத்தில் ’பிரேமம்’ படத்தில் பிடி மாஸ்டராக நடித்த செளபின் ஷாகிர் மிரட்டலாக நடித்துள்ளார். மேலும், கும்பளாங்கி நைட்ஸ் மலையாளப் படத்தில், வெளிநாட்டுப் பெண்ணைக் காதலிக்கும் நபராக நடித்திருந்த ஸ்ரீநாத் பாஸி, நன்றாக நடித்துள்ளார். மற்றவர்கள் ஏறக்குறைய புதுமுகம் தான். ஆனால், காட்சிக்குத் தேவைப்படும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் ’குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ என்னும் பாடல், வேறுஒரு விதமாக வெளிவந்து படமாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பாடல் வெளிவரும்போது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இப்படத்திற்கான ஸ்கிரீன்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் குழுவினர், நடிகர் கமல்ஹாசனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பில், மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம், கலை இயக்குநர் அஜயன் சாலிசேரி, இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், நடிகர் ஸ்ரீநாத் பாஸி மற்றும் படக்குழுவினர் முக்கியமாக இருந்தனர். இதுவும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படக்குழுவினருக்கு மிகப்பெரிய புரோமோஷனைத் தந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில், இப்படமும் மிகப்பெரிய வசூலைப் பெறும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். இப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும், படத்தின் இயக்குநர் சிதம்பரம் மிகப்பெரிய கமல்ஹாசனின் ரசிகர் என்பதும் கூடுதல் தகவல்.
இப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதால் சில மிகைப்படுத்தல்களும் இப்படத்தில் ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமலு 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 50 கோடி ரூபாய் வசூலித்து இன்னும் சக்கைப் போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9