HBD SS Rajmouli: அரைசதத்தை எட்டிய இந்திய சினிமா வசூல் மன்னன்! உலகின் செல்வாக்கு நிறைந்த மனிதர் ராஜமெளலிக்கு பிறந்தநாள்
உலக அளவில் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக இருந்து வருபவரும், இந்திய சினிமாவில் அதிக சம்பளத்தை பெறும் இயக்குநருமான எஸ்எஸ் ராஜமெளலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய சினிமாவின் பெருமையை உலகறிய செய்த இயக்குநர்களின் இந்த நூற்றாண்டில் முக்கியமானவராக இருப்பவர் எஸ்எஸ் ராஜமெளலி. கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டிருந்த தெலுங்கரான ராஜமெளலி, தெலுங்கு சினிமாவின் பிரபல திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் விஜயேந்திர பிரசாத்தின் மகன். சிறு வயதில் இருந்தே கதை சொல்வதிலும், கேட்பதிலும் ஆர்வமாக இருந்த ராஜமெளலி காமிக் புத்தகங்கள், இதிகாச கதைகளை விரும்பி படிப்பவராக இருந்துள்ளளார்.
சினிமாவில் முதலில் உதவி எடிட்டராக பணிபுரிந்த ராஜமெளலி, பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து அங்கு ஏவிஎம் ரெக்கார்டிங் தியேட்டரிலும் சில காலம் பணிபுரிந்துள்ளார். தனது தந்தையும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் உதவியாளராக பணியாற்றிய ராஜமெளலி, பின்னர் விளம்பர படங்களை இயக்கியுள்ளார். சில சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார்.
2001இல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட ராஜமெளலி, ஜூனியர் என்ஆருக்கு ஹிட் கொடுக்க அடுத்த அவரை வைத்து சிம்ஹாத்ரி என்ற ஆக்ஷன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படமும் ஹிட்டாகி அந்த காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய படமாக அமைந்தது.
தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக ரக்பி விளையாட்டை மையாமாக வைத்து தனது மூன்றாவது படமாக சை என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ஹிட்டடித்துடன், நான்கு நந்தி விருதுகளையும் வென்றது.
இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சத்ரபதி, ரவி தேஜாவை வைத்து விக்ரமர்குடு, மீண்டும் ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து எமதோங்கா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.
தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கே உரித்தான பாணியில் ஆக்ஷன் கலந்த மசாலா படங்களாக கொடுத்து வந்த ராஜமெளலி யாரும் எதிர்பார்த்திராத நிலையில் ராம் சரண் - காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் பேண்டஸி ரெமாண்டிக் ஆக்ஷன் படத்தை தந்தார். இந்தப் படம் தான் அவரை தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி பிற மொழி ரசிகர்களால் கவனிக்க வைத்தது.
மகதீரா தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பிற மொழிகளிலும் ஹிட்டானது. இப்படியொரு பிரமாண்ட ஹிட் கொடுத்த பின்னர் அடுத்த டுவிஸ்டாக காமெடி நடிகர் சுனிலை ஹீரோவாக வைத்து மரியாதை ரமணா என்ற காமெடி கலந்த ரெமாண்டிக் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.
அதன் பின்னர் ஈகா, தமிழில் நான் ஈ என்ற படத்தை உருவாக்கினார். பேண்டஸி காதல் கதையான இதுவும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் படமாக ஹிட்டானது.
அப்புறம்தான் உலகையே வியக்க வைத்த பாகுபலி சீரிஸ் படங்களை இயக்கி, இந்திய சினிமாவின் சர்வதேச அளவில் புகழ் பெற வைத்தார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டாம் பாகம் உலக அளவில் ரூ. 2 ஆயிரம் கோடி வசூலித்த முதல் இந்திய சினிமா என்ற பெருமையை பெற்றது.
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு தனது ஆஸ்தான ஹீரோவான ஜூனியர் என்டிஆர், மற்றும் தனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த ராம்சரண் ஆகியோரின் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை உருவாக்கி அதிலும் வெற்றி கண்டார்.
அத்துடன் மற்றொரு சிறப்பு அம்சமாக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்படித்த நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் விருது பெறும் முதல் இந்திய படம் என்ற பெருமையும் ஆர்ஆர்ஆர் பெற்றது.
இதுவரை இயக்கியிருக்கும் அனைத்து படங்களையும் சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குநர் என்ற பெருமையை பெற்றிருக்கும் ராஜமெளலி, பான் இந்தியா சினிமாக்களுக்கு தனது மகதீரா படம் மூலம் மீண்டும் புத்துயிர் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் என்றே கூற வேண்டும்.
தனது சினிமா வாழ்க்கையில் தேசிய விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது என மொத்த 7 பிரபல விருதுகளை வென்றுள்ள ராஜமெளலி, உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் விருதுகளை பெற்றுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் கிங், பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என பல ஹீரோக்களை ரசிகர்கள் அழைப்பதுண்டு. அந்த வகையில் இந்திய சினிமாவை உலகறிய செய்த இயக்குநராகவும், வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வரும் சினிமா இயக்குநராக இருக்கும் எஸ்எஸ் ராஜமெளலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9