55 Years of EthirNeechal: காமெடியாக திரையில் தன்னம்பிக்கை ஊட்டிய எதிர்நீச்சல் ஓர் கிளாஸிக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  55 Years Of Ethirneechal: காமெடியாக திரையில் தன்னம்பிக்கை ஊட்டிய எதிர்நீச்சல் ஓர் கிளாஸிக்!

55 Years of EthirNeechal: காமெடியாக திரையில் தன்னம்பிக்கை ஊட்டிய எதிர்நீச்சல் ஓர் கிளாஸிக்!

Marimuthu M HT Tamil
Dec 12, 2023 05:50 AM IST

55 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர் நீச்சல் திரைப்படம் குறித்த சிறப்புக்கட்டுரையைப் பற்றி பார்க்கலாம்.

55 Years of எதிர் நீச்சல்
55 Years of எதிர் நீச்சல்

எதிர்நீச்சல் படத்தின் கதை என்ன? மது(நாகேஷ்) ஆதரவற்ற அநாதை. அவர் ஒரு ஒட்டுக்குடித்தனத்தில் மாடியின் படிக்கட்டின்கீழ் தங்கிக்கொண்டு, தனது கல்லூரி படிப்பைத் தொடர்கிறார். இரவில் வேலை செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு புத்தகம் வாங்கிக்கொள்கிறார். அந்த ஒட்டுக்குடித்தனத்தில் இருப்பவர்கள் சொல்லும் பணியை செய்துகொண்டு இரண்டுவேளை உணவை அவர்களிடம் யாசகமாகப் பெற்று சாப்பிடுகிறார். ஆனால், அந்த குடியிருப்புவாசிகளில் சபாபதி(மேஜர் சுந்தர்ராஜன்) மற்றும் நாயர்(முத்துராமன்) ஆகிய இருவர் மதுவிற்கு தொடர்ந்து உதவுகின்றனர். அதேபோல், மதுவுக்கு கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் படிக்க உதவுகிறார்.

அப்போது அந்த குடியிருப்பிற்கு வரும் பாரு(ஜெயந்தி)-வுக்கு குமரேசன்(எம்.ஆர்.ஆர்.வாசு) என்பவரிடம் நிச்சயம் நடக்கயிருக்கிறது. அப்போது, பாரு பெங்களூருவில் மன நல காப்பகத்தில் இருந்து சிகிச்சை பெற்று வெளிவந்தவர் என்ற உண்மை கசிகிறது. இதனால் கடுப்பான மாப்பிள்ளை குமரேசன் 15ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் தான் பாருவை திருமணம் செய்வேன் என்று வாதிடுகிறார். ஆனால், பெண்வீட்டாரிடம் வெறும் 5ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது. இதனால் நிச்சயம் நின்றுபோகிறது. குடியிருப்பாளர்களும் கூட பாருவை அவமதிக்கின்றனர். அவளது பெற்றோரும் கூட பயப்படுகின்றனர், அவளை கட்டுப்படுத்தமுடியாமல்.

ஆனால், மது பாருவுடன் பேசியபின்னர் தான் தெரிகிறது, அவள் நல்லவள் என்று. நாளடைவில் இருவரது நட்பும் காதலாக மாறுகிறது. மதுவும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும், தனது பேராசிரியரின் வழிகாட்டுதலின்பேரில் படித்து தேர்வில் வெற்றிபெறுகிறான். தனது கனவு வேலையில் சேர்கிறான்.

ஒரு கட்டத்தில் மதுவின் காதலை முறித்துக்கொள்ளும் சூழல் வருகிறது. பாரு, நல்ல மனநிலையில் உள்ளவன் என்பது தெரிந்து குமரேசன் அவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறான். மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், இம்முறை பாரு திருமணத்தை நிறுத்துகிறார். அப்போது, திருமணத்தில் பங்கேற்பாளராக வந்த மதுவை, சபாபதி, பாருவை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என கட்டளையிடுகிறார். பாருவின் பெற்றோர்களும் அதற்கு உடன்படுகின்றனர். இறுதியில் பழைய காதலர்களான மதுவும் பாருவும் திருமணம் செய்துகொண்டார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.

தன்னம்பிக்கை மிக்க, துயரங்கள் சூழ்ந்த இக்கதையை தனது காமெடியால் போர் அடிக்காமல் சுவாரஸ்யப்படுத்தியிருப்பார், நாகேஷ், அதை திட்டமிட்டு செயல்படுத்தியிருப்பார், இயக்குநர் கே.பாலச்சந்தர். 

உணவுக்காக குடியிருப்பாளர்களிடம் தட்டை ஏந்திச்செல்லும் மது, ’நான் மது வந்திருக்கிறேன், நான் வந்திருக்கிறேன்’ என யாசகம் பெற்று உணவினை உண்ணும் கதாபாத்திரத்தில் கண்களை குளமாக்கச்செய்துவிடுவார், நாகேஷ். அப்படி ஒரு நடிப்பு.

தவிர, இப்படத்தில் அண்டை வீட்டுக்காரர்களைப் பார்த்து, அவர்கள் அப்படி வாழ்கிறார்கள் இப்படி வாழ்கிறார்கள் என கணவனை நச்சரிக்கும் இரக்கமற்ற பட்டு மாமி(செளகார் ஜானகி) கதாபாத்திரம் இன்றும் பல பெண்களின் குணத்தை நினைவுபடுத்தும் ரகம்.

இசை: இப்படத்திற்கு இசையை வி.குமார் செய்திருந்தார். இவரது இசையில் வெளிவந்த அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா,தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க்கிண்ணங்கள், வெற்றி வேண்டுமோ போட்டுப்பாரடா எதிர்நீச்சல் ஆகியப் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ரகத்தைச் சார்ந்தவை.

'பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதை ஆணித்தரமாக மக்கள் மனதில் பதியச்செய்து அனைவரையும் வாழ்வில் எதிர்நீச்சல் போடச்செய்ய சொன்ன கிளாஸிக் திரைப்படம், ‘எதிர் நீச்சல்’ வெளியாகி 55ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.