RAJINIKANTH VS DURAIMURUGAN: ’பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை!’ ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
RAJINIKANTH VS DURAIMURUGAN: இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர் அவர். அவரிடம் ”ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே!” என்று கூறினார். அவர் ‘அப்டியா! சந்தோஷம்’ என்று சொல்லுவார் என நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.
’பல்லு போன நடிகர்களால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை’ என்று நடிகர் ரஜினி காந்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து உள்ளார்.
’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
துரைமுருகனை சமாளிப்பது சாதாரணம் இல்லை
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினி காந்த், இந்த விழாவுக்கு என்ன பேச வேண்டும் என்று சொல்வதை விட, என்ன பேசக் கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்து உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் இல்லை என்று என்னிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கலைஞரை பொறுத்தவரை சினிமா, இலக்கியம், அரசியல் என்று மூன்றுதான். அவருடைய சினிமா குறித்து நான் நிறைய முறை பேசிவிட்டேன். அவரது இலக்கியம் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரது கதைகள், கவிதைகளை நான் படித்தது இல்லை.
அடுத்து உள்ளது அரசியல்தான், அதை பற்றி நான் பேச வேண்டும் எனில் ரொம்ப ஜாக்ரதையாக பேச வேண்டும். மதிப்புக்குரிய நண்பர் ஸ்டாலின் சார் அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு அவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உள்ளார். அவருடைய ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை இந்த நேரத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பள்ளி ஆசியர்களுக்கு புதிய மாணவர்கள் பிரச்னையே கிடையாது சமாளித்துவிடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்லை. இங்கே ஏகபட்ட பழைய மாணவர்கள் உள்ளார்கள். அதுவும் அவர்கள் சாதாரணமாணவர்கள் இல்லை; அசாத்யமானவர்கள். அவர்கள் அனைவரும் ரேங்க் வாங்கிவிட்டு கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர்.
அவர்களை எல்லாம் சமாளிப்பது சாதாரணம் இல்லை. இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர் அவர். அவரிடம் ”ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே!” என்று கூறினார். அவர் ‘அப்டியா! சந்தோஷம்’ என்று சொல்லுவர்.
ஆனால் அவர் நன்றாக உள்ளது என்பதற்காக சந்தோஷம் என்று சொல்கிறாரா? அல்லது என்னடா இப்டி பன்றீங்கண்ணு சந்தோஷம்னு சொல்கிறாரா? என்பது புரியாது. ஸ்டாலின் சார் ’ஆட்ஸ் ஆஃப் டூ யூ’ என கூறினார்.
நான் உஷாராகவே இருப்பேன்! - ரஜினிக்கு முதலமைச்சர் பதில்
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல நம்முடைய சூப்பர் ஸ்டார் வருகை தந்து மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி இருந்தார்.
ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி
இந்த நிலையில் வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் நடிகர் ரஜினி காந்தின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகனெல்லாம் வயசு ஆகிபோய், பல்லு விழுந்து போய் தாடி வளர்த்து சாகுற நிலைல இருக்குறதால இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாம இருக்கான்” என கூறி உள்ளார்.