"மேஜர் முகுந்தனை சாதி அடையாளத்திற்குள் அடக்க முடியாது" மதுவந்திக்கு பதிலடி தந்த டைரக்டர்
மேஜர் முகுந்த் வரதராஜன் தன்னை தமிழனாகவும், இந்தியனாகவும் தான் அடையாளப்படுத்த விரும்பினார். அவர் தன்னை எந்த சாதிய அடையாளத்தோடும் தொடர்புபடுத்த விரும்பவில்லை என அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்நத ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளியாகியுள்ளது அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தனாகவும், சாய் பல்லவி முகுந்தனின் மனைவியாகவும் நடித்துள்ளனர்.
வசூலில் சாதனை
திபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான அமரன் படம், தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, வெளியான 5 நாட்களிலேயே 150 கோடி வசூலை நெருங்கிச் சென்றுள்ளது. திரைப்படத் துறையினர், அரசியல் தலைவர்கள் என படத்தை பார்க்கும் இடங்களில் எல்லாம் பாராட்டு மழை பொழிந்து வந்தாலும், சிலர் சமூக ரீதியிலான விமர்சனங்களை படத்தின் மீது வைத்த வண்ணமாகவே இருந்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில், அமரன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய படத்தின் இயக்குநர், நேரடியாகவே படத்தின் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருப்பார்.
விமர்சனத்திற்கு பதிலளித்த ராஜ்குமார் பெரியசாமி
வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "தனது அப்பாவை, தினமும் செல்லமாக நைனா எனவும், அம்மாவை செல்லமாக ஸ்வீட்டி எனவும் கூப்பிடும் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர்கள், முதல் மீட்டிங்கிலேயே என்னிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? முகுந்த் எப்போதுமே தன்னை இந்தியன் என்று தான் சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவான். அவன் சர்டிபிகேட்டில் கூட எந்த குறியீடும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன். அதனால் ஆர்மி மேனான அவனுக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் இந்தப் படத்தில் கொடுங்க என்பது தான் என்றார்.
நம்பிக்கை கொடுத்த படம்
முன்னதாக, மேஜர் முகுந்த் வராதராஜனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நன்றி சொல்லிக் கொண்ட ராஜ்குமார், எந்த ஜானர் திரைப்படமாக இருந்தாலும் நேர்மையாக எடுத்தால் மக்கள் அதைக் கொண்டாடுவார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலமாக தெரிந்துகொண்டேன். இந்த வெற்றி எனக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இது மாதிரியான படங்களை இனி அடுத்தடுத்து எடுக்க நம்பிக்கை வந்துள்ளது. மேஜர் முகுந்தனின் தியாகத்துக்கு இந்தப் படம் மரியாதை செலுத்தியிருக்கும் என நம்புறேன் எனக் கூறினார்.
இந்துவின் கோரிக்கை
முகுந்த் ஒரு தமிழர். ஒரு தமிழ் சார்ந்த நடிகரை இந்தப் படத்தில் நடிக்க வையுங்கள் என இந்து என்னிடம் கூறினார். அதன் பிறகு தான் நாங்கள் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தோம். அவருடைய இருப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு கதாநாயகன் ஓகே சொல்லும்போதுதான் இயக்குநர், தயாரிப்பாளரின் எண்ணத்திற்கு உயிர் கிடைக்கிறது எனவும் அவர் பெருமையாக கூறினார்.
சாதி பிரச்சனை
முன்னதாக நேற்று, பிராமணர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதுவந்தி, ஒருவரைப் பற்றி படம் எடுத்தால், அவர் எந்த சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்பதைக் கூறவும் டைரக்டருக்கு துப்பு வேண்டும். உள்ளதை அப்படியே சொல்ல தைரியும் வேண்டும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை விமர்சத்திருந்தார்.
பிராமணிய பின்னணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
அதுமட்டுமல்லாமல், ஒரு சுயசரிதை அவரது வாழ்க்கையை உண்மையாக சித்தரிக்க வேண்டும். இவர்களின் கருத்தியலுக்காக அவரது பிராமண பின்னணியை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல என முன்னாள் ராணுவ வீரர் தியாகராஜனும் விமர்சித்திருந்தார்.
டாபிக்ஸ்