HBD Director Ezhil: ‘எல்லாம் தந்த எழில்’ எப்போதும் ஸ்பெஷல் ஏன்?
ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் இவர் இயக்கிய முதல் படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.
துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி, மனம் கொத்தி பறவை என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர்தான் எழில்.
நீண்ட காலமாக தமிழ் திரையுலகில் பயணித்து வருபவர். ஆனாலும், தேர்ந்தெடுத்த தரமான கதைகளை மட்டுமே இயக்கி வருகிறார்.
ஆரம்ப காலத்தில் சென்டிமென்ட்டான குடும்பப் படங்களை இவர் இயக்கியிருந்தாலும், மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துறை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சரவணன் இருக்க பயமேன் என பக்கா காமெடி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை மகிழ்ச்சியாக்கி அனுப்பி வைத்தார்.
மயிலாடுதுறையில் பிப்ரவரி 1ஆம் தேதி 1964ஆம் ஆண்டு பிறந்தார் இயக்குநர் எழில்.
இயக்குநர்கள் பார்த்திபன், ராபர்ட் ராஜசேகர், பன்னீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் எழில்.
ஆர்.பி.செளதரி தயாரிப்பில் இவர் இயக்கிய முதல் படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.
விஜய், சிம்ரன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.
இந்தப் படத்தின் கதையை வைகைப் புயல் வடிவேலுக்காக எழில் முதலில் எழுதியிருந்தார் என்பது மற்றொரு சுவாரசியமான தகவல் ஆகும்.
அந்தப் படம் இரண்டாவது சிறந்த படமாக மாநில அரசின் விருதையும் வென்றது.
பின்னர் இவர் நடிகர் அஜித் குமார், ஜோதிகா ஆகியோரை வைத்து இயக்கிய பூவெல்லாம் உன் வாசம் 100 நாட்களை கடந்து ஓடி மாநில அரசின் சிறந்த படத்திற்கான (இரண்டாம் இடம்) விருதை தட்டிச் சென்றது.
ஜெயம் ரவி, பாவனா ஆகியோரை வைத்து இவர் இயக்கிய தீபாவளி படம் இன்றளவும் இளைஞர்களின் காதல் காவியமாக இருக்கிறது.
குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற கவிஞர் நா.முத்துக்குமாரின் "காதல் வைத்து காதல் வைத்து", "போகாதே போகாதே" ஆகிய பாடல்கள் இளைஞர்களின் இதயம் தொட்ட பாடல்களானது.
வளர்ந்து வந்து கொண்டிருந்த நடிகராக இருந்த சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்தி பறவை படத்தை தயாரித்து இயக்கினார் எழில். அது அவருக்கு வெற்றியையும் தேடி தந்தது.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள் படமும், விஷ்ணு விஷால் நடிப்பில் ஜகஜலா கில்லாடி படமும் தயார் நிலையில் உள்ளது.
காமெடி கதைகளை உருவாக்குவது ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைப்பதும் சாதாரண பணியல்ல. அதை மிக அழகாக செய்து வெற்றி அடையும் இயக்குநர் எழில், தொடர்ந்து தனது படைப்புகளின் வாயிலாக ரசிகர்களை கொண்டாட்ட நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே திரை ரசிகர்களின் வேண்டுகோள்.
தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்க வாழ்த்துகள் இயக்குநர் அவர்களே!
டாபிக்ஸ்