Ameer: ‘மாரி செல்வராஜ் சண்டைக்குவானு கூப்பிட்டாரா?’ இயக்குனர் அமீர் காட்டம்!
எனக்கு முன்பு பேசியவர்கள், அரசியல் தான் ஜாதியை உருவாக்கியது என்றார்கள். அதில் எனக்கு முரண்பாடு உள்ளது. ஜாதியை உருவாக்கியது சனாதனம்.
சேரன் நடிக்கும் தமிழ் குடிமகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் அமீர் பேசியதாவது:
‘‘இசை வெளியீட்டு விழாவின் நோக்கம், படம் பற்றி வெளியே பேசப்படுவது தான். இசையமைப்பாளரைப் பற்றி பேசப்படுவது இல்லை. படத்தின் பெயர் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக தான் இசை வெளியீட்டு விழா நடக்கிறது . இசையமைப்பாளர்களின் இசையைப் பற்றி பேச மக்கள் தயாராக உள்ளனர். அதனால் இங்கு பேச வேண்டியதில்லை.
இசைவெளியீட்டு விழாவில் தான் இசையமைப்பாளர் கவனர் போல இருக்கிறார், அதன் பின் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று இசையமைப்பாளர் கூறினார். உண்மை தான், அது ஒரு அதிகாரம் இல்லாத பதவி தான் . ஆனால், வெளி உலகில் கவர்னர் பரபரப்பாக தான் இருக்கிறார். அவர் வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார். சாமானியன் குரலை கூட தடுக்கிறார்.
ஒரு படம் எடுத்து விட்டால் ஜாதி ஒழிந்துவிடுமா? என்கிற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. மாரி செல்வராஜ், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து பேசியிருந்தார். இசக்கி கதாபாத்திரம் தான், மாமன்னர் கதாபாத்திரம் உருவாக காரணம் என்று கூறியிருந்தார்.
யூடியூப்பில் இசக்கி என்பவர், சினிமாக்காரர்களை கடுமையாக திட்டியுள்ளார். கடைசி வரை அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இறுதியாக ரஞ்சித், மாரிசெல்வராஜ் படம் எடுத்து தான், சமுதாயத்தை சீரழித்ததாக, அண்ணன் தம்பியாக இருந்தவர்களை சண்டை போட செய்ததாக கூறியிருந்தார்.
அதுவரை அவர் பேசியதில் நியாயம் இருந்தது. கடைசி வார்த்தை பயன்படுத்தும் போது தான் தெரிந்தது, ‘இந்த வார்த்தை ஏன் தேவர் மகன் வரும் போது வரவில்லை? சின்ன கவுண்டர் வரும் போது வரவில்லை?’ அப்போது நீங்க சொல்லியிருக்க வேண்டுமே, உங்களால் தான் ஜாதி சண்டை வருகிறது என்று?
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் சொல்வதை கேட்க ஆரம்பித்து விட்டார்கள், அதை ஆபத்தா உணர்கிறார். அதனால் அந்த வார்த்தையை சொல்கிறார். மாரிசெல்வராஜ், யாரையும் சண்டைக்கு வா என்று அழைக்கவில்லை. என்னை ஏன் இப்படி நடத்துறீங்க? என்று தான் கேட்கிறார்.
ஜாதி இன்றைக்கு மேலோங்கி நிற்க காரணம் அரசியல் தான். எனக்கு முன்பு பேசியவர்கள், அரசியல் தான் ஜாதியை உருவாக்கியது என்றார்கள். அதில் எனக்கு முரண்பாடு உள்ளது. ஜாதியை உருவாக்கியது சனாதனம். ஜாதியை பிடித்துக்கொண்டிருப்பது அரசியல். அரசியல் மாற்றத்தை நிகழ்த்த சினிமாவில் முடியுமா என்றால், ஜாதியை ஒழிக்க முடியாது, ஆனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
யாரால் நாம் படித்தோம் என்று விவாதிப்பதை விட, எப்போது படித்தோம் என்பதை யோசிக்க வேண்டும். குருகுலம் பாடசாலையாகி, பள்ளிக் கூடமா மாறி இவ்வளவு தாண்டி படித்திருக்கிறோம்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் அமீர் பேசியிருந்தார். அதே நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்