மிஷ்கின் கொடுத்த வாழ்வு.. ஹிருத்திக் ரோஷனுடன் லிப் லாக்.. விஜய்யின் கடைசி ஜோடி.. பூஜா ஹெக்டே ஜெயித்த கதை!
மிஷ்கின் கொடுத்த வாழ்வு மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் லிப் லாக் மற்றும் விஜய்யின் கடைசி ஜோடி என நடிகை பூஜா ஹெக்டே ஜெயித்த கதை குறித்துப் பார்ப்போம்.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், நடிகை பூஜா ஹெக்டே. மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன், அகில் அக்கினேனி, பிரபாஸ், விஜய், ரன்வீர் சிங், சல்மான் கான் என முக்கிய நட்சத்திரங்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். சிக்கான அவரது உடல்வாகும், அதற்கேற்றவாறான ஆடைத் தேர்வும் பூஜா ஹெக்டேவுக்கு பல ரசிகர் மற்றும் ரசிகைகளை உருவாக்கி உள்ளன. இன்று பிறந்தநாள் காணும் பூஜா ஹெக்டேவின் கதையினைப் பார்ப்போம்.
யார் இந்த பூஜா ஹெக்டே?:
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரில் துளு மொழி பேசும், கர்நாடகாவின் கடற்கரையோர சத்திரியர்களான பந்த் குடும்பத்தில் 13 அக்டோபர் 1990ஆம் ஆண்டு பிறந்தவர், நடிகை பூஜா ஹெக்டே. இவர்களது பூர்வீகம் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி ஆகும். இவரது தந்தையின் பெயர் மஞ்சுநாத் ஹெக்டே, தாயார் பெயர் லதா ஹெக்டே என்பதாகும்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பூஜா ஹெக்டேவுக்கு இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் உண்டு. பள்ளி முடித்து விட்டு கல்லூரியில் இணையும்போதே உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப்போட்டி ஆகியப் போட்டிகளில் பூஜா ஹெக்டே பங்கேற்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தார். இருந்தாலும் தொடர்ச்சியாக மாடலிங் செய்துவந்தார்.
மிஷ்கின் எனும் வெளிச்சத்தால் வெளியில் தெரிந்த பூஜா ஹெக்டே:
மாடலிங் செய்துவந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல சினிமா இயக்குநர்களின் கைகளுக்குப் போகும். அப்படி, இவரது போட்டோவைப் பார்த்த இயக்குநர் மிஷ்கின், தனது சூப்பர் ஹீரோ படமான ’முகமூடி’யில் கதாநாயகியாக நடிக்க பூஜா சரியாகவும் பாந்தமாகவும் இருப்பார் எனத் தேர்ந்து எடுத்தார். அது மிகச்சரியான தேர்வு என்பதை அவர் பின்னால் உணர்ந்து இருப்பார். ’முகமூடி’ படத்தில் சக்தி என்னும் கதாபாத்திரத்தில் தோன்றிய பூஜா ஹெக்டே, சமூகத்தில் இருக்கும் அவலங்களை மாற்றத்துடிக்கும் பெண்ணாக, சூப்பர் ஹீரோவுக்கு உதவும் பெண்ணாக நடித்திருப்பார். அதன் விளைவு, 2013ஆம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழாவில் தமிழில் ’சிறந்த அறிமுக நடிகை’ எனும் தலைப்பில் பரிந்துரைக்கப்பட்டார்.
தெலுங்கில் கிடைத்த வரவேற்பு:
அதன்பின் தமிழில் வாய்ப்புகள் இன்றி தவித்த பூஜா ஹெக்டேவுக்கு, தெலுங்கு சினிமா வாய்ப்பளித்து வரவேற்றது. பின் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து 2014ஆம் ஆண்டு வெளியான, ‘ஒக லைலா கோஷம்’ என்ற படம் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. பின் தெலுங்கில் வருண் தேஜ்ஜுடன் இணைந்து நடித்த ’முகுந்தா’ படமும் 2014ஆம் ஆண்டே ரிலீஸானது.
ஹிருத்திக் ரோஷனுடன் லிப் லாக் செய்த பூஜா:
2016ஆம் ஆண்டு வெளியான ’மொகஞ்சதரோ’ என்னும் இந்தி படத்தில், பாலிவுட் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனுடன் லிப்லாக் செய்யும் காட்சியில் நடித்து பிரபலமானார். பின் மீண்டும் தெலுங்கில் ராம் சரண் ஹீரோவாக நடித்த, ’ரங்கஸ்தலம்’ படத்தில் ஜிகிலு ராணி என்னும் ஐட்டம் சாங்கில் நடித்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
பின் தெலுங்கின் உச்சநட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் படமான ‘அரவிந்தா சமேத வீர ராகவா’என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். பின் தெலுங்கின் மற்றொரு உச்ச நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த ’மகரிஷி’ படமும் செம ஹிட்டானது. பின் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்து வெளியான ’அல வைகுந்தபுரமுலு’ படத்தில், அல்லு அர்ஜூன் ’புட்டபொம்மா புட்டபொம்மா’ என உருகி உருகி காதலிக்கும் பெண் அமுல்யா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார், பூஜா ஹெக்டே. இப்படத்தின் பாடல்கள் தந்த மைலேஜ் இந்தியா முழுமைக்கும் பூஜா ஹெக்டே குறித்து அறிய வைத்தது.
புகழுடன் மீண்டும் தமிழுக்கு வந்த பூஜா:
பிறமொழிகளில் பல்வேறுவெற்றிகளைக் குவித்தபின்னர், தான் எங்கு துவங்கினோமோ அதே இண்டஸ்ட்ரியில், உச்ச நடிகரான விஜய்யின் கதாநாயகியாக பீஸ்ட் படத்தில் நடித்தார், பூஜா ஹெக்டே. இப்படத்திற்குப் பின், கிஷிகா பாய் கிஷிகி ஜான் என்னும் இந்தி படத்தில் சல்மான் கானுடன் ஜோடியாக நடித்தார். தற்போது சூர்யாவுடன் சேர்ந்து அவரது 44ஆவது படத்திலும், நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 69ஆவது படத்திலும் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
அத்தகைய அனைவராலும் ரசிக்கப்படும் பூஜா ஹெக்டேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்
டாபிக்ஸ்