‘என் கணவர் இறந்து 8 மாதம் ஆகிறது: வடிவேலு சர்சையில் சிக்கினேன்’ -ப்ரேம ப்ரியா!
Comedy Actress Prema Priya Speech: ‘ஹீரோயின் பத்தி சொல்லியே ஆகணும். கடைசி நிமிடத்தில் நான் தான் அவரை அடையாளப்படுத்தினேன். ஆனால், அவர் என் பெயரை கூட குறிப்பிடவில்லை. குறைந்தபட்சம் ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம்’ -ப்ரேம ப்ரியா!
பல படங்களில் நாம் பார்த்த ப்ரேம ப்ரியாவா இது என்பது போல் தான் இருக்கிறது அவரது நிஜத் தோற்றம். காமெடி நடிகையாக தன்னுடைய இயல்பான தோற்றத்தை மறைத்து, நகைப்புக்குரிய தோற்றத்தை ஏற்று வரும் ப்ரேம ப்ரியா, சமீபத்தில் வடிவேலுவை கடுமையாக விமர்சித்தவர். ஏன் இது நடந்து? சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் பேசிய அவர், அதற்கான பதிலை தந்துள்ளார். இதோ அவரது பேச்சு:
‘‘ரமேஷ் சார் பற்றி நான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்காக அவர் தீவிரமாக பணியாற்றினார். தயாரிப்பு மேலாளராக இருந்தவர், இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். நாங்கள் அமர்ந்து பேசும் போது எங்களுக்கு அலுவலகம் கூட கிடையாது.
எல்லாமே சரவணா பவனில் அமர்ந்து தான் பேசினோம். அங்கு இருந்து தான், நடிகர்கள் தேர்வு முதற்கொண்டு நடந்தது. இயக்குனர் எங்கு இருந்தார்? எப்படி கதை பண்ணார் என்பது தெரியாது. எங்கோ இருந்து அவர் பணியாற்றினார்.
எல்லாரும் ஒரு அணியாக இருந்து தான் இந்த படத்தை முடித்தோம். ரதி மேடம், ஒரு துணிவான பெண். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர் பேசத் தெரியாது என்று கூறியது பொய். அவர் எப்படி பேசுவார் என்று எனக்குத் தெரியும்.
ஹீரோயின் பத்தி சொல்லியே ஆகணும். கடைசி நிமிடத்தில் நான் தான் அவரை அடையாளப்படுத்தினேன். ஆனால், அவர் என் பெயரை கூட குறிப்பிடவில்லை. குறைந்தபட்சம் ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்லை, பக்கா சினிமாக்காரங்களா மாறிட்டாங்க.
சூப்பரான டீம் ஒர்க் பண்ணிருக்கோம். தயாரிப்பாளர் மேடம் என்ன நினைத்தார்களோ, அதை விட குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராம் சார். அடுத்த படத்தையும் அவருக்கு பண்ணுவாங்க. அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு செலவில்லாமல் பார்த்துக்கொண்டார்.
இப்போ தான், சர்சையில் சிக்கியிருந்தேன். போண்டா மணி சாருக்கு நடிகர் வடிவேலு உதவி பண்ணவில்லை என யூடியூப்பில் பேசியது நான் தான். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ராஜன் சார் இங்கு இல்லை, அவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சின்ன கலைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.
போண்டா மணி சாருக்காக நான் நிறைய இண்டர்வியூவில் பேசியிருக்கிறேன். யாரும் உதவி செய்யவில்லை என்கிற குறையை இப்போது ராஜன் சார் பூர்த்தி செய்ததை கண்கூடாக பார்த்தேன். போண்டா மணி சார் தான், என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.
என்னுடைய கணவர் இறந்து 8 மாதங்கள் ஆகிறது. அவரும் ஒரு இயக்குனர் தான். அவருடைய பணம் எனக்கு கிடைக்கவில்லை என்று நான் வருத்தப்பட்டபோது, ஒரு வாரத்தில் பேசி அந்த பணத்தை எனக்கு வாங்கித் தந்தார் பேரரசு சார். அவருக்கும் நன்றி. நான் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க!’’
என்று அந்த நிகழச்சியில் ப்ரேம ப்ரியா பேசியுள்ளார்.
டாபிக்ஸ்