என் மனைவி ஆசைப்பட்டது இத மட்டும் தான்.. குடும்பம் நல்லா இருந்தா தான்.. வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்..
என் மனைவி என்னை எந்த விதத்துலயும் தொந்தரவு செய்ய மாட்டாங்க. அவங்க என்கிட்ட ஆசைப்பட்டு கேட்டது இத மட்டும் தான் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
உலகளவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பிஹைண்ட் உட்ஸ் யூடியூப்பில் கேள்வி எழுப்பி இருப்பார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், இதற்கு என் குடும்பமும் மனைவியும் தான் முக்கிய காரணம். எனக் கூறினார்.
மனைவியின் ஆசை
பின், விக்னேஷ் சிவன் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான நோட்ஸ் ஆஃப் ஏ ட்ரீம் எனும் புத்தகத்தில் அவர் மனைவி சாய்ரா பானு பற்றி குறிப்பிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினார். அந்தப் புத்தகத்தில் உங்களுடன் இருந்த நாட்களையும், உங்கள் இருவருக்குமான சின்ன சின்ன சந்தோஷம் தரும் விஷயங்களையும் குறிப்பிட்டிருப்பார். அதை பற்றி கூறுமாறு கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரஹ்மான், என் வீட்டிற்கு பின்னாடி உள்ள தெருவில் தான் என்னுடைய ஸ்டூடியோ உள்ளது. அதுனால, என் வேலை முடிஞ்சதா உடனே வீட்டுக்கு போயிடுவேன். அங்கேயே சாப்டுட்டு அப்டியே இருப்பேன். என் மனைவிக்கு தேவை எல்லாம் என்னோட ஒரு ஐஸ்கிரீம் சாப்டுறது தான். கல்யாணத்துக்கு முன்னாடியே என் மனைவிகிட்ட சொல்லிருக்கேன் நாம எதாவது பிளான் பண்ணிருப்போம். ஆனா, அந்த டைம்ல எதாவது படத்தோட வேலை வந்தா என்னால எங்கேயும் வர முடியாது. ஆனா, ஞாயிற்று கிழமைன்னு இல்ல எப்போ என்னால ஃபிரியா இருக்க முடியுதோ அப்போ வெளிய கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கேன்.
குடும்பம் நல்லா இருந்தா தான்
அந்த வகையில அத எல்லாம் ஏத்துகிட்டு என்னோட குடும்பம் இருக்கு. நான் ரொம்ப கொடுத்து வச்சவன். ஒரு குடும்பம் நல்லா இருந்தா தான் கலைஞன் முன்னுக்கு வர முடியும், வீட்ல அவன டார்சச்ர் பண்ணிட்டா அவன் வாழ்க்கை முடிஞ்சது.
எல்லா குடும்பத்துலயும் சின்னச் சின்ன பிரச்சன இருக்கும். ஆனா, கடவுள் எல்லாருக்கும் சிறப்பானதைத் தான் தருவார். எனக்கு சிறப்பான வாழ்க்கை அமைந்துருக்கு. அதுனால, என் குழந்தைகளுக்கு மற்றவர்கள் பற்றியும் என்னால் சொல்லிக் கொடுக்க முடிந்தது. எனக்கு அப்பா இல்லை. அதனால், என் குழந்தைகளுக்கு ஒரு கண்டிப்பான அப்பாவா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் என தன் வாழ்வின் அழகான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
மிட் நைட்ல பைக் ரைடு
மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுஹாசினி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாய்ரா பானு, எனக்கு ஐஸ்கிரீம் சாப்டுறதுன்னா ரொம்ப பிடிக்கும். இதுக்காக நாங்க ரெண்டு பேரும் மிட் நைட்ல பைக்ல போய் வெளிய சாப்டுட்டு வருவோம். ஹெல்மெட் எல்லாம் போட மாட்டோம். நல்லா ஜாலியா ஒரு ரைட் போயிட்டு வருவோம் என தன் கணவருடன் இருந்த அழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு பிரிவு
ஏ.ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு, ரஹ்மானை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், இதை தனது எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தன் வேதனைகளையும் வலிகளையும் அந்தப் பதிவில் வெளிப்படுத்தி உள்ளார்.
நாங்கள் மிகவும் நம்பினோம்
"நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.
நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும் போது. எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து அறிவிப்பு
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, அவரது வழக்கறிஞர் மூலமாக ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை அறிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.