Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. பொன்வண்ணனின் கதை!-antiromance in paruthiveeran special article on saranya love husband actor pon vannan birthday - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. பொன்வண்ணனின் கதை!

Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. பொன்வண்ணனின் கதை!

Marimuthu M HT Tamil
Sep 23, 2024 06:15 AM IST

Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. நடிகர் பொன்வண்ணனின் பிறந்தநாளை ஒட்டி அவரது காதல் கதை குறித்துப் பார்ப்போம்.

Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. பொன்வண்ணனின் கதை!
Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. பொன்வண்ணனின் கதை!

யார் இந்த பொன்வண்ணன்?

பெற்றோர்கள் வழியில் மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பொன்வண்ணன், ஈரோட்டில் செப்டம்பர் 23ஆம் தேதி, 1964ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது இயற்பெயர், சண்முகம்.

வலம்புரிஜானை சந்தித்ததால் கிடைத்த திருப்புமுனை:

அடிப்படையில் ஓவியராக இருந்த பொன் வண்ணனுக்கு, எழுத்தாளர் வலம்புரி ஜானின் அறிமுகம் கிடைத்தது வாழ்வில் ஒரு திருப்புமுனையைத் தந்தது. ஏனெனில், அப்போது சினிமா தயாரிப்பாளர் கோவை தம்பிக்காக கதைத் தேர்வு பணிகளிலும், புரொடக்‌ஷன் பணிகளையும் தலைமை தாங்கியும் மதர்லேண்ட் பிக்சர்ஸுக்காக, செய்துவந்தார், வலம்புரி ஜான். அதன்பின், அங்கு எழுத்தாளராகப் பணியாற்றிய பொன் வண்ணன், அங்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, வசனங்கள் எழுதுவதில் உதவிபுரிந்தார்.

இதன்மூலம், பாரதிராஜாவின் ’புதுநெல்லு புதுநாத்து’ படத்துக்கு, முதன்முறையாக வசனகர்த்தாவாகப் பணிசெய்யும் வாய்ப்பினைப் பெற்ற பொன்வண்ணன், பின் அப்படத்தில் வீரய்யா என்னும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா, பசும்பொன் ஆகியப் படங்களில் துணைவேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

1992ஆம் ஆண்டு முதன்முறையாக இயக்குநர் ஆன பொன்வண்ணன்:

இதற்கிடையே 1992ஆம் ஆண்டு, அன்னை வயல் என்னும் படத்தை எழுதி இயக்கினார், பொன்வண்ணன். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தில் விக்னேஷ், வினோதினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

இதற்கிடையே 1995ஆம் ஆண்டு, நடிகை சரண்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதன்பின், காந்தி பிறந்த மண், சேனாதிபதி, ரெட்டை ஜடை வயசு, எட்டுப்பட்டி ராசா, கண்ணுக்குள் நிலவு, வீர நடை ஆகியப்படங்களில் சின்ன சின்ன துணை வேடங்களில் நடித்தார், பொன் வண்ணன்.

அதன்பின், இரண்டாவது முறையாக படம் இயக்க முயன்ற பொன்வண்ணன், எழுத்தாளர் சாரா அபுபக்கரின் நாவலை படித்துவிட்டு, அதைத் திரைப்படமாக இயக்க முறைப்படி அனுமதிபெற்றார். பின் அதற்கேற்ற திரைக்கதை எழுதிய பொன்வண்ணன், இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில்(National Film Development Corporation Of India)அதனை சமர்ப்பித்து பண உதவி பெற்றார். அதன்பின், 17 நாட்களில் பாண்டிசேரியில் வைத்து படத்தை ரூ.35 லட்சத்துக்குள் எடுத்து முடித்தார். 2001ஆம் ஆண்டு, ஜமீலா என்னும் பெயரில் எடுக்கப்பட்ட இப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் 2002ஆம் திரையிடப்பட்டது. அதன்பின், 2003ஆம் வருடம் நதி கரையினிலே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், சரியானவரவேற்பினைப் பெறவில்லை என்றாலும், மூன்று மாநில விருதுகளை வென்றது.

நடிகர் பொன்வண்ணனுக்கு பருத்திவீரன் படம் தந்த பிரேக்:

பருத்திவீரன் படத்தில் கழுவத்தேவன் என்னும் கதாபாத்திரத்தில் பொன்வண்ணன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். குறிப்பாக, சாதிய வன்மத்துடன் காதலை எதிர்த்துச் செயல்படும் நபராக மிரட்டியிருப்பார். இப்படத்தின்மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பொன்வண்ணன், அடுத்து மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஆக நடித்திருப்பார். பின், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் ஹீரோவின் தந்தையாக, சிலம்பாட்டம் படத்தில் வீரய்யன் என்னும் கதாபாத்திரத்திலும், ’அயன்’ படத்தில் சுங்கத்துறை அதிகாரி பார்த்திபன் கதாபாத்திரத்திலும், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தவசி மாயாண்டி என்னும் அண்ணன் கேரக்டரிலும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ’பேராண்மை’ படத்தில் வனத்துறை மேல் அதிகாரியாகவும் நடித்து முத்திரை பதித்து இருப்பார். அதன்பின், வாகை சூட வா, கடல், தலைவா, சதுரங்க வேட்டை, காவியத்தலைவன், லிங்கா, பூலோகம், போகன், கடைக்குட்டி சிங்கம், அடங்க மறு, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், என்.ஜி.கே., சுல்தான் ஆகியப் படங்களில் தன் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்து இருப்பார்.

இப்படி நடிப்பில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் பன்முகக்கலைஞர் பொன்வண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.