கங்குவா காய்ச்சலுக்கு மத்தியில் கல்லா கட்டிய அமரன்.. 15வது நாளிலும் நிற்காத வசூல்..
சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று அதிகப்படியான தியேட்டர்களில் வெளியான நிலையிலும், சிவகார்த்திகேயனின் அமரன் படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
வரலாற்று பின்னணி கொண்ட நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்
2 வருடங்களுக்குப் பிறகு சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் திரையரங்குகளில் வெளியாவதாலும், கங்குவா படத்திற்காக படக்குழு செய்த புரொமோஷன்களாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அதிகமாகவே இருந்தது. மேலும், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, உலகம் முழுவதும் 11500 தியேட்டர்களில் கங்குவா திரைப்படத்தை வெளியிட உள்ளதாக கூறிய நிலையில், தமிழ்நாட்டில் வெளியாக இருந்த பல படங்கல் தங்கள் ரிலீஸை ஒத்தி வைத்தன.
அமரனுக்கு சிக்கலா?
அதுமட்டுமின்றி, ஏற்கனவே தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் மற்ற படங்களுக்கும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அமரன் படத்தின் வசூல் வழக்கம் போல நிலையாக சென்று கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.
வசூல் நிலவரம்
அமரன் திரைப்படம் வெளியான 15வது நாளான நேற்று, தமிழ்நாட்டில் மட்டும் 2.04 கோடி ரூபாய் வசூலப் பெற்றுள்ளது. இதுவரை படம் வெளியான 15 நாட்களில் 136.34 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சிவகார்த்திகேயனின் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது.
மேலும், அமரன் படம் வெளியான 15 நாட்களில் இந்தியாவில் மட்டும் 194.35 கோடி ரூபாய் வசூலையும், உலகளவில் 269 கோடி ரூபாய் வசூலையும் பெற்று பிளாக் பஸ்டர் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது sacnilk.com எனும் இணையதளம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
ஓடிடி ரிலீஸ் ஒத்தி வைப்பு
கங்குவா வெளியீட்டிற்குப் பின், அமரன் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வசூல் சீராக சென்று கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
முன்னதாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், அமரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு குறைந்தபட்சம் 8 வாரங்கள் கடந்த பின் வெளியிட கோரிக்கை விடுத்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ், தயாரிப்பாளர் கமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
இராணுவ வீரரின் உண்மைக் கதை
இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்