Actress Rohini: ‘நான் அவரை சரியா டீல் பண்ணல.. இன்னும் அந்த குற்ற உணர்ச்சி இருக்கு’ -ரோஹினி ரகுவரன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Rohini: ‘நான் அவரை சரியா டீல் பண்ணல.. இன்னும் அந்த குற்ற உணர்ச்சி இருக்கு’ -ரோஹினி ரகுவரன்!

Actress Rohini: ‘நான் அவரை சரியா டீல் பண்ணல.. இன்னும் அந்த குற்ற உணர்ச்சி இருக்கு’ -ரோஹினி ரகுவரன்!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 09, 2023 06:00 AM IST

Actor Raghuvaran: ‘அவருக்கு சுகர் இருந்தது, அல்சர் இருந்தது. அது எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு டீ, ஒரு சிகரெட்டோடு முடித்துக் கொள்வார். நான் அவரிடம் அது பற்றி கேட்டால், ‘சாப்பிட்டால் மண் திண்ட பாம்பு போல ஆகிவிடுவேன். அதனால் சாப்பிடுவதில்லை’ என்று கூறுவார்’

மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் மனைவி ரோஹினி
மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் மனைவி ரோஹினி

‘‘ரகுவரன் சாரை நிறைய பேர் இன்னும் விரும்புகிறார்கள். அவரை நிறைய பேர் மிஸ் செய்கிறார்கள். தினமும் அவரது ஏதாவது ஒரு வீடியோ க்ளிப், என்னை டேக் செய்து வருகிறது. ஏதோ என்னிடம் சொன்னால், அவருக்கே சொல்வதைப் போல நினைத்து, தினமும் அவரைப் பற்றி பலர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒரு குடும்பத்திற்குள், அப்பா, கணவர், நம் பகுதியாக இருக்கும் ஒருவரை நாம் இழக்கும் போது, ஒரு நாள் கூட அவரைப் பற்றி பேசாத பேச்சோ, நினைவோ இருக்காது. அவர் இல்லாத நாளை தாண்டுவது எப்படி என்பதை தான் நாம் கற்றுக் கொள்கிறோம். எங்கள் மகன் ரிஷி நலனில் பலரும் அக்கறை செலுத்துகிறார்கள். அதற்கு காரணம் ரகுவரன் மீது உள்ள அன்பு தான் காரணம்.

முகம் தெரியாத ஒருவரின் ஆட்டோவில் போனால் கூட, ‘பையன் எப்படி இருக்கான்’ என்று தான் கேட்கிறார்கள். அப்பா இல்லாத பையன் என்கிற அனுதாபத்தில் பலரும் அவனைப்பற்றி என்னிடம் கேட்பார்கள். ரகுவரன் பையன் நன்றாக இருக்க வேண்டும் என்கிற அன்பு பலரிடம் வெளிபடுகிறது. 

ரகுவரன் தன் உடலை வருத்திக் கொண்டது எல்லாமே நடிப்புக்காக தான். காலையில் ஒரு சீன் தொடங்கிவிட்டால், அந்த சீன் முடியும் வரை சாப்பிட மாட்டார். அவருக்கு சுகர் இருந்தது, அல்சர் இருந்தது. அது எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு டீ, ஒரு சிகரெட்டோடு முடித்துக் கொள்வார்.  நான் அவரிடம் அது பற்றி கேட்டால், ‘சாப்பிட்டால் மண் திண்ட பாம்பு போல ஆகிவிடுவேன். அதனால் சாப்பிடுவதில்லை’ என்று கூறுவார். 

ஆனால் அவர் அப்படி இருப்பதால் இரண்டு நாளில் அது ரியாக்‌ஷன் காட்டிவிடும். அது அவருக்கு அவ்வளவு வேதனை தரும். ஆனால் அதற்காக அவர் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. ரகுவரன் எப்படி நடிப்பு மீது தீராத காதல் கொண்டிருந்தாரோ,  அது போல அவர் மகன் மெடிக்கல் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார். 

தன்னை ரகுவரன் மகன் என வெளியில் காட்டிக் கொள்ள கூடாது என்று உறுதியாக இருக்கிறான். ‘அவரோட பையன், நான் எப்படி இருக்கனும்! அதனால் தான் அதை காட்டிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்’ என்று அவன் என்னிடம் கூறினான். 

அவர் இறந்த பின், அவரோட நடிப்பை அங்கீகரிக்கவில்லையே என்கிற ஆதங்கம் நடிகர் சங்கம் உள்ளிட்ட எல்லார் மீதும் எனக்கு இருந்தது. ஒரு ரசிகையாக தான் நான் அவரை மணந்தேன். நான் அவரை திருமணம் செய்த போது, பல பெண்களின் பொறாமையை சந்தித்தேன். 

ஒரு குறுகிய காலகட்டம் தான் நாங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த வாழ்க்கையில் நான் புரிந்து கொண்ட வரை, அவர் வேறு மாதிரியான ஒரு நபர். அவரை என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்திருந்தால் அவரை வேறு மாதிரி டீல் பண்ணிருக்கலாமோ என்கிற குற்ற உணர்வு இன்னும் எனக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது,’’
என்று அந்த பேட்டியில் ரோஹினி ரகுவரன் பேசியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.