Anushka: 'ஜெக்கம்மா.. மாயம்மா' -15 ஆண்டுகளை நிறைவுசெய்த அருந்ததி - நன்றி கூறிய அனுஷ்கா
அருந்ததி படக்குழுவினருக்கு நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
அருந்ததி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில், படக்குழுவினருக்கு நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
கோடி ராமகிருஷ்ணா என்பவரது இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தெலுங்கில் வெளியான திகில் திரைப்படம், அருந்ததி. ரூ.13.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெமினி டிவி ரூ.7 கோடி கொடுத்து கைப்பற்றியது. வெளிநாட்டு உரிமை ரூ. 3 கோடி வரை விற்பனையானது.
படத்தின் கதை என்ன? முதல் ஜென்மத்தில் பெண்களை பலாத்காரம் செய்து அநீதி செய்யும் தனது அக்கா கணவரை, மறு ஜென்மத்தில் அதே பரம்பரையில் கொள்ளுபேத்தியாக பிறந்து, கொன்று கட்வால் சமஸ்தான மக்களை காக்குகிறார், அருந்ததி. இப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்காக, ராகுல் நம்பியார், ஆந்திர மாநிலத்தின் ஸ்பெஷல் விருதான நந்தி விருதினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அருந்ததி திரைப்படம் வெளியாகி 15ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையில் படக்குழுவினருக்கு, இப்படத்தில் அருந்ததி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘’ஜெஜம்மா(தமிழில் ஜெக்கம்மா) எனக்கு என்றென்றும் ரசிகர்களின் மனதில் ஒரு சிறப்பு வாய்ந்த இடத்தைக் கொடுத்த கதாபாத்திரம் ஆகும்.
அருந்ததி படத்தின் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா அவர்களுக்கும்,தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி அவர்களுக்கும் மற்றும் இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க படத்தை எடுக்க உதவிய அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி.
மேலும், எப்போதும் தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு ஒரு பக்கம் மிரட்டினால், இசையும் கலைப்படைப்பும் மிரட்டலாக இருந்தது. அருந்ததி படத்துக்குண்டான இசையை ’கோடி’என்னும் இசையமைப்பாளரும்; கலைப்படைப்பை அசோக் என்பவரும் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9