Brindha Sivakumar: ‘அண்ணன்களுக்காக விட்டு கொடுத்தேன்’ பிருந்தா சிவக்குமார்!
Actor's Suriya and karthi Sister Brindha Sivakumar:
நடிகர் சிவக்குமாரின் மகள், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தங்கை, அதை தாண்டி பாடகி. இப்போது பிரம்மாஸ்திரா படத்தில் ஆலிவுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல பெருமைகளை தாங்கி நிற்பவர் பிருந்தா சிவக்குமார். தனக்கான பாதையை அவர் தேர்வு செய்தது எப்படி? எப்படி இருந்தது அவரது இளமை காலம்? அத்தனைக்கும் அருமையாக பதிலளித்திருக்கிறார் பிருந்தா. இணைதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘டப்பிங் வாய்ப்பு என்னுடைய உறவினர் சுமன் என்பவரால் கிடைத்தது. அவருக்கு என்னை சிறு வயதில் இருந்து தெரியும். நான் பாடுவதை அவர் கேட்டிருக்கிறார். அவர் தான், ‘ஒரு டப்பிங் வாய்ப்பு உள்ளது, முயற்சித்து பார்க்கிறீயா’ என்று கேட்டார். சரி, ஏன் வேண்டாம் என முயற்சித்தேன்.
இந்தி எனக்கு அடிப்படையில் தெரியும், கத்துக்கிட்டேன். சின்ன வயதில் அப்பாவின் டப்பிங்கிற்கு போயிருக்கிறேன். அது எங்கேயோ பதிவாகியிருக்கிறது. ஆலியாபட்டிற்கு டப்பிங் கொடுக்கப் போகிறோம் என்பதற்காக, அவரின் படங்களை பார்க்க தொடங்கினேன்.
எனக்கான பணி ஆணை கிடைத்த பின், ஓர் ஆண்டு இடைவெளி இருந்தது. அந்த நேரத்தில் ஆல்யாவின் படங்களை பார்த்தேன். அவருடைய உச்சரிப்பு, உதடு அசைவுகளை அறிந்து கொள்ள அது உதவியது. 5 படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன். அவர், திறமையான நடிகை. அப்போது தான் எனக்கு புரிந்தது, இது எவ்வளவு பெரிய ஆஃபர் என்று.
சில சீன்களில் அவர் வேகமாக பேசுவார், அது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. சவாலாக இருந்தது. ஆலியாவுக்கு குரல் கொடுக்க, அவருடைய வயது பெண்ணாக மாற வேண்டும் என்று நினைத்தேன்.
டப்பிங் பேசுவதற்கு கூட சர்ட், ஜீன்ஸ் தான் போட்டு சென்றேன். அந்த உணர்வு வரவேண்டும் என்பதற்காக அதை செய்தேன். கல்லூரி மாணவியாக நினைத்துக் கொண்டு தான் டப்பிங் போவேன்.
ரன்பீர் கபீரை பார்க்கும் போது, நம்ம தான் அவங்க என்பது போல, ரன்பீரை ரொமான்ஸ் செய்வது போல நினைத்து பேச வேண்டும். அப்போது தான் அந்த உணர்வு வரும். சில வசனங்கள் நேரடி மொழி பெயர்ப்பாக இருந்தாலும், சில உள்ளீடுகளை நானும் கொடுத்தேன்.
நானும் அவர்களிடம இப்படி பேசலாமா என்று அவர்களிடம் கேட்டேன், அவர்களும் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான், பாடும் ஆசை இருப்பதே எனக்கு தெரிந்தது. பள்ளி நிகழ்ச்சியில் நிறைய பேர் பாடிட்டு இருந்தாங்க. சிலர் பாடுவதை கேட்கும் போது, நாமும் படலாம் என தோன்றியது.
முதன் முதலில் மேடையில் ஏறி, ‘போவோமா ஊர்கோலம்’ பாடல் தான் பாடினேன். அதுக்கு அப்புறம் தான் கர்நாடக இசை கத்துக்கொண்டேன். 10 கீர்த்தனை வரை கத்துக்கிட்டேன். நடிப்பு பற்றி நான் பெரிதாக யோசித்தது இல்லை. ரேவதி மேடம் படங்களை விரும்பி பார்ப்பேன்.
சின்ன வயதில் என்னிடம் நீ என்ன ஆகப் போகிறாய் என கேட்ட போது, ‘நான் ரேவதி ஆகப்போகிறேன்’ என்று தான் கூறினேன். நதியாவையும் பிடிக்கும். ராதிகா அக்காவை பிடிக்கும். இவர்களை எல்லாம் பிடிக்கும், ஆனால், நடிக்கும் ஆசை வந்ததில்லை.
10 ம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு பாடும் வாய்ப்பு வந்தது. கார்த்திக்ராஜா சார் தான் அழைத்தார். அப்போது தேர்வு இருந்ததால், அதில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டேன். 20 வயதில் எனக்கு நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அந்த நேரத்தில் சூழல் அப்படி இருந்ததால் என்னால் இரண்டையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
‘முன்பே வா’ பாடலை நான் தான் பாடுவதாக இருந்தது. இன்னும் சிறப்பாக வர வேண்டும் என்று நான் காத்திருந்தேன். குடும்பத்திலிருந்து ஒரு வாய்ப்பு வராமல், வெளியில் இருந்து வாய்ப்பு வர வேண்டும் என்று நினைத்தேன்.
2018ல் மிஸ்டர் சந்திரமெளலி படத்திற்காக பாட தனஞ்செயன் சார் தான் அப்பாவிடம் கேட்டார். அப்போது,தாராளமாக பாடட்டும் என்று அனுமதித்தார்கள். அது தான் முதல் பாடல். எந்த காலகட்டத்திலும் நான் பாடலை விடவே இல்லை.
ஒருநாள் வாய்ப்பு வரும், அது வரை நான் பயிற்சி எடுப்பேன் என்பதில் உறுதியாக இருப்பேன். சூர்யா அண்ணா, ‘ஹரிஸ் ஜெயராஜ் சாரிடம் அறிமுகம் செய்கிறேன், பாடி ரிக்கார்டு பண்ணி கொடு’ என்று கேட்டார். ஆனாலும் எனக்கு, நாம் அந்த இடத்திற்கு வந்துவிட்டோமோ என்று தவிர்த்துவிட்டேன்.
என் கணவர் பெயரும் சிவக்குமார் தான். என் திருமணம் தான் அப்பாவின் கனவு. அதை அண்ணன் சிறப்பாக செய்து முடித்தார். அதிகாலை 4:30 மணிக்கு திருமணம். அன்றைய முதல்வர் ஜெயலலிதா எனக்கு முன்பாக மண்டபத்தில் இருந்தார்.
என்றைக்குமே ஆசைக்கு தடை வைக்க கூடாது. அது என்றாவது நடக்கும். கனவு காண்பதில் எந்த பாரபட்சமும் வேண்டாம். ஆசைப்படும் விசயத்தில், நாம் எதற்கு வேண்டுமானாலும் ஆசை படலாம். ‘ஒரு நாள் என்னை நினைத்து நீங்கள் பெருமை பட வேண்டும்; உங்கள் பசங்களை மட்டும் நினைத்து பெருமைபட்டால் போதாது என்று’ என் அம்மா, அப்பாவிடம் கூறுவேன்.
இரண்டு அண்ணாவிடமும் கூறுவேன், ‘உங்களுக்கு முன்னால் எனக்கு தான் எல்லா ஆஃபரும் வந்தது, நான் தான் அவற்றை விட்டுக் கொடுத்துவிட்டேன்’ என்று. அம்மாவிடம் அவ்வளவு எளிதாக பாராட்டை வாங்க முடியாது. ஆனால், அப்பா அடிக்கடி என் பாடலை கேட்பார். அவரும் உடன் பாடுவார். நான் பாடுவது, பக்கத்து வீடுகளுக்கு கேட்கும். அவர்களும் வீட்டின் வெளியே அமர்ந்து நான் பாடுவதை கேட்பார்கள். அதற்காகவே நான் சத்தமாக பாடுவேன்,’’
என்று அந்த பேட்டியில் பிருந்த சிவக்குமார் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்