வெறியாட்டம் ஆடும் அமரன்.. விட்டதைப் பிடிக்கும் கமல்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெறியாட்டம் ஆடும் அமரன்.. விட்டதைப் பிடிக்கும் கமல்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?

வெறியாட்டம் ஆடும் அமரன்.. விட்டதைப் பிடிக்கும் கமல்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Nov 05, 2024 06:52 AM IST

சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாயைக் கடந்து வசூலைக் குவித்துள்ளது.

வெறியாட்டம் ஆடும் அமரன்.. விட்டதைப் பிடிக்கும் கமல்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?
வெறியாட்டம் ஆடும் அமரன்.. விட்டதைப் பிடிக்கும் கமல்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?

வசூலில் கெத்து காட்டும் அமரன்

அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 5 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 8.25 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 76.9 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

இந்திய அளவில் பார்க்கும் போது படம் 5 நாட்களில் 93.35 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 100 கோடியைக் கடந்து 140.6 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது.

இராணுவ வீரரின் உண்மைக் கதை

இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பேசப்படும் அமரன்

ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாகக் கொண்டுள்ளதால் இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படத்தை பார்த்த பலர் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் சேர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் இராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குடும்ப ரசிகர்களுக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார் என திரையுலகினர் பலர் பாராட்டி வருகின்றனர். படத்தை பார்த்த ரஜினிகாந்த், தன்னால் அழுகையை அடக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவினருக்கு பிக் சல்யூட் எனக் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயனை ராணுவ வீரர்களும் பாராட்டி உள்ளனர். அவர் நடிப்பதற்கு பதிலாக, ராணுவத்திற்கு வந்திருக்க வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்

நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது.

அவரது மனைவி சாய் பல்லவியின் நடிப்பில் அவ்வளவு நிஜம். முகுந்த் மீது இந்து வைத்திருந்த அப்பழுக்கற்ற காதலை, ஆத்மார்த்தமான அன்பை, அவர் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் விதம் நடிப்பில் அவருக்கும் இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறது. இதர கதாபாத்திரங்ளும் உண்மைக்கு நெருக்கமாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருக்கின்றனர். இது மக்களை மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்க தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.