Actor Mansoor Ali Khan: இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம் - காரணம் என்ன?
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய அளவில் இண்டியா கூட்டணியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து தற்போதே பிரதமர் நரேந்திர மோடி சூறாவளிப் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மற்ற அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், திடீர் திருப்பமாக சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பாஜகவுடன் இணைத்துள்ளார். அதேபோல், நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். அவர் அக்கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை சந்தித்து கூட்டணி நடத்தினார். மேலும், ஒரு தொகுதி ஒதுக்கும்பட்சத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது.
செயற்குழு முடிவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுவதாக செயற்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி இவ்வாறு செய்ததாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் சரத் குமார் தனது கட்சியை, பாஜகவுடன் சேர்க்கப்பட்டதுகுறித்து, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகானிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ‘’கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை அப்படிங்கிறீயா. நடிகர் சரத் குமார் அவர்கள் நல்ல நடிகர். எனக்கு மூத்தவர். அர்த்த ராத்திரியில் எழுப்பி ஏன் பொண்டாட்டியை எழுப்பி கேட்கிறீங்க அப்படின்னு எல்லாம் சொல்லக்கூடாது. அது அவங்க பிரச்னைப்பா. இப்ப நீங்க கேட்க வந்ததை கேளுங்கள். கொஞ்ச நேரம் சிரிக்கலாம்னு சிரிச்சேன். நாளைக்கு என் கட்சியையும் சொல்வீங்க’’ என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்களும் எதிர்காலத்தில் சரத் குமார் போல், கட்சியை வேறு ஒரு கட்சியில் இணைத்துவிடுவீர்களா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மன்சூர் அலிகான், ‘’அதற்கு ஆரம்பிக்காமலேயே அழித்து விடலாம். ஏதோ இப்போது தான் கட்சியை ஆரம்பித்து இருக்கோம். எனக்குப் பின்னாடி பத்து பேர் வராங்க. அவ்வளவு ஆர்வமாக இருக்காங்க. அப்படியெல்லாம் எல்லாம் என் கட்சியை இன்னொரு கட்சியுடன் இணைக்கமாட்டேன்’’ என்றார்.
டாபிக்ஸ்