Revolutionary Poet Bharathidasan: ‘தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாள்
- Revolutionary Poet Bharathidasan: கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் தொடர்பான சிறப்புக் கட்டுரையினைப் பார்ப்போம்.
Revolutionary Poet Bharathidasan: அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், கண்ணகி புரட்சிக் காப்பியம், குடும்ப விளக்கு, குமரகுருபரர்,பாண்டியன் பரிசு, பிசிராந்தையார், பாரதிதாசன் ஆத்திசூடி ஆகியப் பல நூல்களை எழுதியவர், கவிஞர் பாரதிதாசன். 1964, ஏப்ரல் 21, இதே நாளில் சென்னையில் மறைந்தார். இவரைப் பற்றி அறிய சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த கவிஞர் பாரதிதாசன்?1891ஆம் ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் கனகசபை மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், பாரதிதாசன். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். சிறுவயது முதலே தமிழ் மீது பற்றுகொண்டிருந்த கனகசுப்புரத்தினம், புதுச்சேரி கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைப் பெற்றார். முதல் இரண்டாண்டுகளில் கல்லூரியிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றதால், 18 வயதிலேயே, கல்லூரியில் தமிழ்ப் பாடத்தை எடுக்க அனுமதி பெற்றார். பின் அப்பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தார்.
அதன்பின், காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1920ஆம் ஆண்டு,பழநி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார்.
கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களை அதிகம் நேசித்தார், பாரதிதாசன். மேலும், பாரதிதாசன், தந்தை பெரியாரின் தீவிரத்தொண்டராக இருந்து சாதி மறுப்பு, கடவுள் மறுப்பினைப் பற்றி பாடல்கள் எழுதினார். மேலும் 1946ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணாவால் ’புரட்சிக் கவி’ எனப் பாராட்டப்பட்டு, ரூ.25,000 பரிசு பெற்று கவுரவிக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டு பாரதிதாசன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், 1969ஆம் ஆண்டு, கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ என்ற நாடக நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்றார்.
கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆன தருணம்: தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டவராக இருந்த கனக சுப்புரத்தினம், தனது நண்பரின் திருமணத்தில், தன் மானசீக குருவான ‘சுப்பிரமணிய பாரதியின்’ பாடலைப் பாடிக் காட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்திருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி, அவரை வெகுவாகப் பாராட்டினார். அன்று முதல் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். தாசன் என்றால் அடிமை என்று பொருள்.
திரைத்துறையில் பாரதிதாசன்: சமத்துவம் பேசிய கவிஞர்களில் முதன்முதலில் திரைப்படத்துறையில் நுழைந்தவர், பாரதிதாசன். 1937ஆம் ஆண்டு, பாலாமணி அல்லது பக்காத்திருடன் என்னும் திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல் எழுதி, திரைத்துறையில் அறிமுகம் ஆனார், பாரதிதாசன். பின், ராமானுஜர், கவி காளமேகம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி, குமரகுருபரர் ஆகியப் படங்களில் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார், பாரதிதாசன்.
மேலும் சில படங்களில் பாடல்கள் எழுதினார். பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் தமிழுக்கும் அமுதென்றுபேர் என்னும் பாடலும், கலங்கரை விளக்கம் திரைப்படத்தில், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு எனும் பாடலும், நம்ம வீட்டு தெய்வம் படத்தில்,எங்கெங்கு காணினும் சக்தியடா என்னும் புகழ்பெற்ற பாடலையும் எழுதினார்.
மேலும் பாரதிதாசனின் மறைவுக்குப் பின், அவரது கவிதை வரிகளில் சில, பாடல்களாக அரங்கு ஏறின. குறிப்பாக, சிவப்பதிகாரம் திரைப்படத்தில், ‘கொலை வாளினை எடடா’ என்னும் பாடலும், அச்சம் என்பது மடமையடா என்னும் படத்தில் ‘அவளும் நானும் அமுதும் தமிழும்’ என்னும் பாடலும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகின.
பாரதிதாசனின் நூல்கள்: அகத்தியன்விட்ட புதுக்கரடி, அமைதி, இன்பக்கடல், அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம், கண்ணகி புரட்சிக் காப்பியம், ஏழைகள் சிரிக்கிறார்கள், குடும்ப விளக்கு, குமர குருபரர், தமிழச்சியின் கத்தி, தாயின் மேல் ஆணை, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திசூடி, பிசிராந்தையார், புரட்சிக் கவி, பாரதிதாசன் கவிதைகள் ஆகியப் பல நூல்களை எழுதியுள்ளார், பாரதிதாசன்.
கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசனுக்கு பழநி அம்மையார் என்ற மனைவியும், சரசுவதி, வசந்தா, ரமணி என்ற மூன்று மகள்களும், மன்னர் மன்னர் என்ற மகனும் இருந்தனர்.
தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் சென்னையில் வசித்த பாரதிதாசன், ஏப்ரல் 21, 1964ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் சாகாவரம்பெற்ற கவிதைகள் போல, அவருக்கு மரணமே கிடையாது.
டாபிக்ஸ்