‘ஒரே படம் தான், ஆனால் வாழ்வு பெற்றவர்கள் பலர்’ 13ம் ஆண்டில் வெண்ணிலா கபடி குழு!
Vennila Kabadi Kuzhu: இந்த படத்தின் வெற்றியே அதில் உள்ள கபடி குழு தான். அந்த குழுவில் இருந்த நிதிஷ் வீரா, ஹரி வைரவன், சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தது தான் மறக்க முடியாத வேதனை.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் ஆகிறது. 2009 ம் ஆண்டு இதே நாளில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பலர், நம்மில் இப்போது இல்லை என்பதே வேதனையானது தான்.
இன்று கொண்டாடப்படும் இயக்குனர் சுசீந்திரனின் முதல் திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இன்று விஷ்ணு விஷால் என்றும், அன்று விஷ்ணு என்றும் அறிமுகமான விஷ்ணு விஷாலின் முதல் படமும் இது தான்.
இன்று பலரால் கொண்டாடப்படும் சூரிக்கு அறிமுகம் மட்டுமல்ல, அடையாளம் கொடுத்ததும் இதே வெண்ணிலா கபடி குழு தான். நிறைய பேரை அறிமுகப்படுத்தி, தன் வருகையையும் வசூலில் நிரூபித்த திரைப்படம்.
ஒரு கிராமத்தில் பல பிரிவுகளை சேர்ந்த இளைஞர்கள், கபடி விளையாட்டு மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்கள். காதல் இருக்கும் அளவிற்கு அவர்களுக்கு ஆதரவு இல்லை. கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு, பார்ட் டைம் ஆக கபடியும் விளையாடி வரும் அவர்கள், ஒரு கட்டத்தில் கிராமத்தினரால் ஏச்சு பேச்சை சந்தித்து, அதற்கு பதிலடி தர, பழநியில் நடக்கும் கபடி போட்டியில் கோப்பை வென்று, ஊருக்கு தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள்.
இதற்கிடையில் கிராமத்திற்கு வரும் பெண்ணுடன் விஷ்ணுவிற்கு காதல், கபடி அணியிலேயே ஜாதி பாகுபாடு, இதையெல்லாம் கடந்து சாதிக்கும் போது, எதிர்பாராதவிதமாக விஷ்ணு விஷால் இறக்க, வெண்ணிலா கபடி குழு வெற்றியோடு இழப்பை சந்திக்கிறது.
சொல்லாத காதல், பேசாத அன்பு, பிரியாத நட்பு, தீண்டாத எண்ணம், திருந்தும் மனம் என குடும்பம், காதல், நட்பு, சிரிப்பு, சிந்தனை என அனைத்து விசயத்தையும் அழகாக சேர்த்து, அன்லிமிட்டடாக அளித்திருப்பார் சுசீந்திரன். செல்வகணேஷின் இசையும், லக்ஷ்மன் குமாரின் ஒளிப்பதிவும், கபடியோடு ரைடு வரும்.
விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர், சூரி என எல்லா கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்றபடி இருக்கும். இந்த படத்தின் வெற்றியே அதில் உள்ள கபடி குழு தான். அந்த குழுவில் இருந்த நிதிஷ் வீரா, ஹரி வைரவன், சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தது தான் மறக்க முடியாத வேதனை.
இதற்காகவே சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட வெண்ணிலா கபடி குழு,இன்று மட்டுமல்ல என்றும் பேசப்படக்கூடிய உன்னதமான படைப்பு!
டாபிக்ஸ்