Annamalai BJP: ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? ஆட்சியர் பதிவை தொடர்ந்து அண்ணாமலை தரப்பு விளக்கம்!
Annamalai BJP: பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆரத்திக்கு மறைத்து வைத்து பணம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் விதிமீறல் என்பதால் பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று இருந்த அந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Annamalai BJP: ஆரத்தி எடுக்கும் போது பணம் தரும் வீடியோவுக்கும் தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கும், இப்போது நடந்து வரும் பிரச்சாரத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை. இந்த தவறான செய்தியை பரப்புவோரின் உள்நோக்கத்தை கண்டறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கப்பட்டுளளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கோவையில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் கோவை நாடாளுமன்ற தொகுதி ஒரு ஸ்டார் தொகுதி என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆரத்திக்கு மறைத்து வைத்து பணம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் விதிமீறல் என்பதால் பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று இருந்த அந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசி இருந்த அண்ணாமலை, நான் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரப்போவதில்லை வாக்கு சேகரிப்புக்காக பணத்தை செலவு செய்யப் போவதும் இல்லை அதற்கு பதிலாக மக்களுக்கு உண்மையாக ஜனநாயகம் என்றால் என்ன என்பதை காட்ட உள்ளேன் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் தான் அவர் ஆரத்திக்கு பணம் கொடுப்பது போன்று பரவிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அலுவலராக உள்ளார். அவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று உள்ள வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
தேர்தல் அலுவலரின் பதிவை தொடர்ந்து பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை அவர்களுக்கு ஒரு பெண் ஆரத்தி எடுக்கும் போது, அவர் பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதைப்பற்றி காவல்துறை துணை கொண்டு விசாரிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிரந்திகுமார் அவர்களும் X (Twitter) தளத்தில் பதிலளித்துள்ளார்.
இப்போது பொதுவெளியில் அரசியல் உள்நோக்கத்தோடு பகிரப்படும் இந்த வீடியோ சரியாக எட்டுமாதம் முன்பாக ஜூலை 2023, காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. என் மண் என் மக்கள் யாத்திரையை ஒட்டிய நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்ணாமலை அவர்களுக்கு அன்போடு ஆரத்தி எடுத்த ஒரு சகோதரிக்கு, பதில் மரியாதையாக கொடுக்கப்பட்ட பணத்தினை கூட வைத்து இப்படி அரசியல் செய்ய முடியுமென நினைக்கிறார்கள் சிலர். தமிழ்நாட்டு மண்ணில் ஆரத்தி எடுப்பதும், ஆரத்தி எடுப்பவர்க்கு அன்பாக ஆரத்தி காசு கொடுப்பதும் காலம் காலமாக வழங்கி வரும் வழக்கம்.
ஆனால் இது தேர்தல் காலம். ஆரத்தி எடுத்தாலும் பணம் கொடுக்க கூடாது, அதை மீறி கொடுத்தால் அது வாக்குக்கு கொடுக்கப்பட்ட லஞ்சமாகவே கருதப்படும் என்பதை எல்லோரும் அறிவர்.
எனவே இந்த வீடியோவுக்கும் தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கும், இப்போது நடந்து வரும் பிரச்சாரத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை. இந்த தவறான செய்தியை பரப்புவோரின் உள்நோக்கத்தை கண்டறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்போடு ஊடகங்களின் வாயிலாக வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்