தமிழ் செய்திகள்  /  Elections  /  Vijay In Tamilaga Vettri Kazhagam Contest From Puducherry Constituency In 2024 Lok Sabha Elections?

TVK Vijay: ‘2026 வரை ஏன் காத்திருக்க வேண்டும்?’ புதுச்சேரியை ‘டிக்’ செய்யலாமே விஜய்.. தலையசைப்பாரா தளபதி?

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 05, 2024 06:30 AM IST

‘ஒருவேளை புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுவிட்டால்? அது தேசத்திற்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா? ‘இந்தியாவில் ஒரு மாநிலத்தில் விஜய் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது’ என்கிற சேதியை சொல்லும். வெல்லப்போவது என்னமோ ஒரு தொகுதி தான், ஆனால் சொல்லும் சேதி.. மிகப்பெரியது’

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்?
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்?

ட்ரெண்டிங் செய்திகள்

என்ன செய்யலாம் விஜய்?

2026 தமிழக தேர்தல் களம் தான் தன்னுடைய இலக்கு என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். ஒருவகையில் அது சரியான முடிவு தான். ஆனால், கட்சியை ஆரம்பித்துவிட்டு, தள்ளி நின்று வேடிக்கை பார்க்க முடியாதே? அதற்கு விஜய்க்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் களத்தை விஜய் 2026ல் சந்திக்கட்டும். அதற்கு முன்பாக புதுச்சேரி என்கிற களம் இருக்கிறதே? அங்கு ஒரே ஒரு மக்களவை தொகுதி தான் இருக்கிறது. தமிழ்நாடு சாராத தனி யூனியன் பிரதேசம் புதுச்சேரி. அங்கு தன்னுடைய அரசியல் பயணத்தை மக்களவை தொகுதியில் இருந்து தொடங்கலாம் விஜய்.

புதுச்சேரியை ஏன் தேர்வு செய்யலாம்?

புதுச்சேரியில் நன்கு அனுபவம் கொண்ட புஸ்ஸி ஆனந்த் அவருடன் இருக்கிறார். இது இயல்பாகவே விஜய்க்கு ப்ளஸ். ஒரே ஒரு தொகுதி, அதுவும் அங்கு வெற்றி பெற்றால், ஒரு மாநிலத்தை பிடித்ததைப் போன்ற ஒரு செய்தியை கூறலாம். தோற்று இரண்டாம் இடம் பிடித்தாலோ, அல்லது மூன்றாம் இடம் பிடித்தால் கூட, வெற்றியை தவறவிட்டவரின் ஓட்டுகளை வாங்கினார் என்கிற பெயரை கூட வாங்கலாம். அது 2026 தேர்தலை சந்திக்கும் போது, புதுச்சேரியில் 3 இடம் பெற்ற கட்சி என்கிற பெரிய பேரோடு கட்சியை அழைத்து வரும். அதுவே 2வது இடமோ, அல்லது வெற்றியோ பெற்றுவிட்டால், விஜய்யின் 2026ம் ஆண்டின் வருகை, தமிழகத்தில் அசுரத் தனமாக இருக்கும். கே.ஜி.எப்., பாணியில் , ‘நீங்க மட்டும் அவன் குறுக்க வந்துடாதீங்க சார்..’ என்கிற லெவலில் தான் இருக்கும். 

எந்த வகையில் பார்த்தாலும் ப்ளஸ் தான்!

புதுச்சேரி மாதிரியான சிறிய யூனியன் பிரதேசத்தில் போட்டியிடும் போது, எளிதில் பிரசாரம் செய்யலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களை தேர்தல் பணியில் இறக்கினால், புதுச்சேரி தாங்குமா? மற்ற கட்சிகள் எல்லாம் அந்தந்த மாநிலங்களில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, விஜய்யின் புதுச்சேரி ரசிகர்களோடு, தமிழ்நாடு ரசிகர்களும் களமிறங்கினால், புதுச்சேரியை சல்லடை போட்டுவிடலாம். இது விஜய்க்கு பெரிய ப்ளஸ். ஏற்கனவே சொன்னது போல, புதுச்சேரிக்காரர் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். அவரையே வேட்பாளராக போட்டால், அது இன்னும் அதிக அறிமுகத்தை கொடுக்கும். விஜய் ஓரிரு முறை பிரசாரத்திற்கு வந்தாலே போதும், புதுச்சேரியில் கட்டாயம் புரட்சியை துவக்கலாம். 

இது தான் முக்கியமானது!

மக்களவை தேர்தல் என்பது தேசிய கட்சிகளின் தலைமையை தீர்மானிப்பது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, புதுச்சேரியில் போட்டியிடும் போது, பாஜக-காங்கிரஸ் என்கிற இரு பிரதான கட்சிகளை எதிர்த்து நேருக்கு நேராக களம் காணும் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கும். என்ன தான், அங்கு திமுக, அதிமுக இருந்தாலும், அவர்கள் இங்கிருக்கும் காங்கிரஸ், பாஜகவை போல தான் அங்கு. எனவே புதுச்சேரியை விஜய் டிக் செய்து, கண்ணை மூடி களத்தில் இறங்கினால், அது அவருக்கு எந்த வகையிலாவது அரசியல் லாபத்தை தரலாம். திமுக-அதிமுக என்பதற்கு மாற்று, 2026 தான் என்கிற அவருடைய இலக்கும் இதனால் பாதிக்காது. ஒருவேளை அவருக்கு படப்பிடிப்புகள் இருக்குமே ஆனால், அதுவும் இதனால் பாதிக்காது. 

இதுவும் சரியான தருணம் தான்!

சினிமாவில் ஒரு வசனம் வரும், ‘இந்த அமெரிக்க மாப்பிள்ளை எல்லாம் வேணாம்… நேரா ஹீரோ தானா..’ என்பதைப் போல இல்லாமல், வரவிருக்கும் தேர்தலில் விஜய் களமிறங்க வேண்டும். அது குறைந்தபட்சம் புதுச்சேரியாக இருந்தால், அது அவருக்கு பல வழிகளில் அரசியல் அனுபவத்தை தரும். ஒருவேளை புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுவிட்டால்? அது தேசத்திற்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா? ‘இந்தியாவில் ஒரு மாநிலத்தில் விஜய் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது’ என்கிற சேதியை சொல்லும். வெல்லப்போவது என்னமோ ஒரு தொகுதி தான், ஆனால் சொல்லும் சேதி.. மிகப்பெரியது. 

பரிசோதனை முயற்சிக்கு சரியான களம்!

விஜய் எடுத்த எடுப்பில் ஒரு தேர்தலை சந்திப்பதற்கும், ஒது பொதுத் தேர்தலை சந்தித்து அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அரசியல் பயணத்தை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இந்த 2024 மக்களவை பொதுத் தேர்தலை விஜய் பயன்படுத்த வேண்டும். அது குறைந்தபட்சம் புதுச்சேரியாக இருந்தால், கட்டாயம் அது அவருக்கு எல்லா வகையிலும் பயன் தரும். இன்னும் காலம் இருக்கிறது; விஜய் ஒரு அடி எடுத்து வைத்தால், நாளை பல படிகட்டுகளை அவர் கடக்க உதவியாக இருக்கும். பார்க்கலாம், விஜய் களத்தில் குதிக்கிறாரா? இல்லை, வேடிக்கை பார்க்கிறாரா? என்று!

WhatsApp channel

டாபிக்ஸ்