தமிழ் செய்திகள்  /  Elections  /  Namakkal Constituency Candidate Sudden Change This Is The Background Do You Know Who The New Candidate Is

Namakkal Candidate: நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் மாற்றம்.. பின்னணி இதுதான்! புது வேட்பாளர் யார் தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 22, 2024 08:21 AM IST

Parliment Election: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் வேட்பாளர் சூரிய மூர்த்தி அதிரடியாக மாற்றப்பட்டு மாதேஸ்வரன் என்பவர் புதிய வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.

மாதேஸ்வரன்
மாதேஸ்வரன்

ட்ரெண்டிங் செய்திகள்

வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி அங்கம் வகிக்கிறது.

கொங்கு மக்கள் தேசியக் கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்சியின் சார்பில் இளைஞரணி மாநில செயலாளராக இருந்த சூரிய மூர்த்தி என்பவர் நாமக்கல் தொகுதி வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நாமக்கல் தொகுதியின் வேட்பாளரை மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி சூரிய மூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் என்பவர் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சூரிய மூர்த்தி கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் சூரியமூர்த்தி ஜாதிய ரீதியாக பேசிய பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதை அடுத்து கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் சூரியமூர்த்திக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். கண்டனங்களும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நாமக்கல் வேட்பாளரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதை அடுத்து சூரிய மூர்த்திக்கு பதிலாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவைச் சேர்ந்தவர் எஸ்.சூரியமூர்த்தி. இவர் கொமதேக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். கடந்த 2001 மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதியிலும், 2006ஆம் ஆண்டு வெள்ளக்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவர் வரும் சட்ட மன்ற தேர்தலில் கொமதேக வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக எஸ்.சூரிய மூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் தங்கள் சமூகம் சார்ந்த பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம் என்று பொருள் படும்படி பேசி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு கூட்டணி கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தால் தற்போது கொமதேக தனது வேட்பாளரை மாற்றி அறிவித்துள்ளது.

முன்னதாக திமுகவுடன் கூட்டணி கையெழுத்தான நிலையில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

2019ஆம் ஆண்டை போல் நாமக்கல் தொகுதியில் போட்டியிட உள்ளோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி வாகை சூடும். விரைவில் எங்கள் பணிகளை தொகுதியில் துவக்குவோம். கூட்டணிக்கு யார் வருவார்கள் என எதிரில் இருக்குக் கட்சிகளெல்லாம் கதவு, ஜன்னல், வெண்டிலேட்டர்களை திறந்து வைத்திருக்கும் போது எங்கள் கூட்டணி தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக பாடுபடும் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறோம் என்றார்.
ஆனால் தற்போது கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரே சாதிய ரீதியான பேச்சுகளார் ஏற்பட்ட சர்ச்சையால் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9
 

 

WhatsApp channel