Parandur: ’விமான நிலையத்திற்கு எதிர்ப்பு! இதுவரை 9 ஓட்டுக்கள் மட்டுமே பதிவு!’ பரந்தூர் மக்களிடம் கெஞ்சும் அதிகாரிகள்!
”இந்த கிராமத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 9 பேர் மட்டுமே வாக்கு அளித்து உள்ளனர்”
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை கண்டித்து அந்தப் பகுதி மக்கள் 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையும் பிறப்பித்துள்ளது. பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கி உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தாலூக்காவில் உள்ள 20 கிராமங்களில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிராக தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த கிராமத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 9 பேர் மட்டுமே வாக்கு அளித்து உள்ளனர். பிறர் யாரும் வாக்கு அளிக்காததால் தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏகானாபுரத்தில் உள்ள அரசு ஊழியர்களின் வீடுவீடாக சென்று வட்டாட்சியர் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வட்டாட்சியரின் வருகைக்கு எதிராக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்களிக்க சொல்லி தங்கள் கிராம மக்களை வற்புத்தக்கூடாது என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். கிராம மக்களிடன் தொடர் எதிர்ப்பால் வட்டாட்சியர் புறப்பட்டு சென்றார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் அருகே பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.