Premalatha Vijayakanth: ’பாஜகவுடன் நல்லுறவில்தான் உள்ளோம்! ராஜ்யசபா சீட்டு முக்கியம்!’ பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
”எங்களுக்கு தர வேண்டிய ராஜ்யசபா சீட்டை தர வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லி உள்ளோம். நல்ல செய்தி வரும் என்று அவர்கள் கூறி உள்ளனர்”
தேமுதிக பொதுச்செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வந்தால் கூட்டணிக்காக கட்சிகள் வருவது இயற்கை. தேமுதிக உடன் கூட்டணி அமைக்க அமைச்சர் பெருமக்கள் வீட்டுக்கு வந்து அழைப்பு விடுத்தார்கள். எங்கள் கட்சி சார்பில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு, பார்த்தசாரதி, மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்துவிட்டு வந்துள்ளனர். இன்னும் ஒருவாரத்திற்குள் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பதை உங்களிடம் கூறுவேன்.
ராஜ்யசபா சீட் குறித்து உறுதி செய்யப்படாத செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன. எங்கள் உரிமையை கேட்பது எங்கள் கடமை. தமிழ்நாட்டை பொறுத்தவரை அத்தனை அரசியல் கட்சிகளிலும் ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். அந்த அடிப்படையில் தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் வேண்டும் என்பதை கேட்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக சார்பில் அமைச்சர் பெருமக்கள் வந்து கேப்டன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. வெகு விரைவில் எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். அதிமுக அழைப்பின் பெயரில் எங்கள் தலைமைக்கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள். எங்களுக்கு தர வேண்டிய ராஜ்யசபா சீட்டை தர வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லி உள்ளோம். நல்ல செய்தி வரும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.
பாஜகவை சேர்ந்த அனைத்து தலைவர்களுமே கேப்டன் கோயிலுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்ததால், மரியாதை நிமித்தமாக எங்கள் நிர்வாகிகளையும் அதிமுக அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம்.
பாஜகவுடன் திரை மறைவில் பேசவில்லை, அவர்களும் எங்கள் உடன் நல்ல உறவில்தான் உள்ளார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 வழிகள்தான் உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, தனித்து போட்டியிடுவது என 4 வழிகள்தான் உள்ளது. இதில் திமுக கூட்டணி ஏற்கெனவே முடிந்துவிட்டது. மீதி மூன்று வழிகள்தான் உள்ளது. கட்சிக்கு எந்து நன்மையோ அதை செய்வோம்.