Trichy Suriya:ராம சீனிவாசனை திருச்சியில் நிறுத்தினால் பாஜக டெபாசிட் இழக்கும் - கல(ழ)கக் குரல் எழுப்பிய திருச்சி சூர்யா!
Trichy Suriya: திருச்சியில் ராம சீனிவாசனை மக்களவைத் தேர்தலில் நிறுத்தினால், பாஜக தோற்கும் என வெளிப்படையாக கமெண்ட் அடித்துள்ளார், பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா.
Trichy Suriya: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால், பாஜக டெபாசிட் இழக்கும் என பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் இருக்கும் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா, திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் ஆவார். தந்தை - மகன் இடையே இருந்த விரிசல் காரணமாக, கட்சி மாறிய திருச்சி சூர்யா, வெளியில் வந்ததும் தான் திமுகவில் கனிமொழியின் ஆதரவாளராக இருந்தவர் என்று ஊடகங்களில் வெளிப்படையாகப் பேசியவர்.
அவ்வப்போது ஊடகங்களில் பாஜகவைச் சார்ந்தவரையே விமர்சித்து பிரபலம் ஆனவர். கடந்த 2023ஆம் ஆண்டு, தமிழக பாஜகவின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அதைத்தொடர்ந்து, ஆடியோ வைரல் ஆன மறுநாள் இருவரும் தங்களுக்குள் சமாதானம் ஆகிக்கொண்டு, கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அது பலரால் அப்போது ட்ரோல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் திருச்சி சூர்யா சிவா 6 மாத காலத்துக்குப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்னும், பாஜகவில் நடக்கும் உள் அரசியலையும் கடுமையாக விமர்சித்தார், திருச்சி சூர்யா. அதன்பின், அதிமுகவில் இணையப்போவதாகத் தகவல்கள் பரவிய நிலையில், உடனடியாக பாஜகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார், திருச்சி சூர்யா.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி சூர்யா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திருச்சி சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார் என கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் பாஜகவில் செயல்பட்டு வருகிறார், திருச்சி சூர்யா.
அதன்பின், திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால், பாஜக டெபாசிட் இழக்கும்.
வெற்றியை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால், திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார். மேலும் வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
திருச்சி சூர்யா கூறும், பாஜகவின் ராம சீனிவாசன், மதுரையைச் சார்ந்தவர். தமிழ்நாடு பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும், நபார்டு வங்கியின் தனி இயக்குநராகவும் இருக்கிறார்.
மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர், திருச்சியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவரால் திருச்சியில் வெல்லமுடியாது என்பது தான், திருச்சி சூர்யா வைக்கும் குற்றச்சாட்டு. இது ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணி சார்பில், மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ, களமிறங்குகிறார். அதேபோல், அதிமுக கூட்டணி சார்பில், ஐந்து தொகுதிகளில் நிற்கும் தேமுதிகவுக்கு, திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரேமலதா விஜயகாந்த் அல்லது விஜய பிரபாகரன் ஆகிய இருவரில் ஒருவர், தேமுதிக சார்பில் திருச்சியில் நிற்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் இருமுனைப் போட்டி, திருச்சியில் பலமாக இருக்கும் நிலையில்,பாஜக சார்பில் இத்தொகுதியில் ராம. சீனிவாசனுக்குப் பதிலாக, திருச்சி சூர்யா களம் இறக்கப்பட்டார். கடும்மும்முனைப்போட்டி ஆகிவிடும் என்பது உறுதி.
டாபிக்ஸ்