தமிழ் செய்திகள்  /  Elections  /  Election Commission Of India Orders To Allocate Matchbox Symbol To Mdmk

MDMK Symbol: மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!

Kathiravan V HT Tamil
Mar 30, 2024 04:21 PM IST

”திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது”

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திமுக - மதிமுக கூட்டணி 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்றத்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் மதிமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரை வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார். 

உதயசூரியன் முதல் சொந்த சின்னம் வரை

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈரோடு கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக அறிவித்து இருந்தது. 

செத்தாலும் சொந்த சின்னம்தான்!

திமுக தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திருச்சி திமுக மாவட்ட செயலாளர் வைரமணி வலியுறுத்திய நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரை வைகோ, ”கட்சிக்காக எனக்கு விருப்பம் இல்லமல் நிற்கிறேன்; 30 வருஷம் உழைத்து தேய்ந்துவிட்டார். செத்தாலும் எங்களுக்கு தனி சின்னம்தான், நான் சுயமரியாதைக்காரன். அறிஞர் அண்ணாவின் கட்சி திமுக, டாக்டர் கலைஞர் கட்சி திமுக, எங்கள் அப்பாவும் திமுகவில்தான் இருந்தார், இதே உதயசூரியன் சின்னத்தில்தான் எங்கள் அப்பாவும் போட்டியிட்டார், உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு எங்கள் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னோரு சின்னத்தில் நிற்க முடியாது.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு மதவாத சக்திகள் காலூன்ற நினைக்கின்றன. இந்த நேரத்தில் தயவு செய்து எங்களை புண்படுத்தாதீர்கள். நீங்கள் சீட்டே கொடுக்காவிட்டாலும், 40 தொகுதியிலும் வேலை பார்க்கிறோம். தயவு செய்து எங்களை புண்படுத்தாதீர்கள்.

இந்த தேர்தலை பொறுத்தவரை பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி, திமுக அணி வெற்றி பெற உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம்” என துரை வைகோ கண்ணீல் மல்க பேசி இருந்தார். 

பம்பரம் சின்னம்!

மதிமுக கடந்த காலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பம்பரம் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. இந்த நிலையில் தீப்பெட்டி சின்னத்தில் நிற்க மதிமுக முடிவு செய்துள்ளது. மேலும் தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருச்சியில் மதிமுகவினர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 

WhatsApp channel