CM MK Stalin: "பிரதமர் மோடிக்கு தான் தூக்கம் வரவில்லை"..திருச்சியில் அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
Trichy DMK Meeting: தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என்பதால், பிரதமர் மோடிக்குதான் தூக்கம் வரவில்லை" என்று திருச்சியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று (மார்ச் 22) பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: "டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே.. திருச்சி என்றாலே திருப்புமுனை தான். இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம். பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்கான துவக்கமாக இங்கு திரண்டிருக்கிறோம்.
வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? நாற்பதுக்கு, நாற்பது. எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்தத் திருச்சிதான். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. அதன் அடையாளமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியின் ஆட்சியை ஒன்றியத்தில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்; அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார்.
சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், “தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், தி.மு.க.வினருக்குத் தூக்கம் வரவில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடியபோகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும் – கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது. சரி, தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா? வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை! இனி வந்தாலும், சொல்லவும் முடியாது.
பத்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றைக்கூட சொல்ல முடியுமா! இவர் நம்மை விமர்சிக்கிறார். இப்போது நான் சொல்கிறேன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக, மக்களாகிய உங்களுக்காகச் செய்த சாதனைகளின் பட்டியல் சொல்லவா. சொன்னால் இன்றைக்கு ஒரு நாள் போதாது.
கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. அரசு இஷ்டத்திற்கு ஏற்றிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டு ஏழை-எளிய மாணவர்களின் உயிரை பழிவாங்கும் நீட் தேர்வு ஒழிக்கப்படும். மாநிலங்களுடைய உயிர்மூச்சாக இருக்கின்ற நிதி உரிமைக்கு வேட்டு வைக்கும், தற்போதைய ஜி.எஸ்.டி முறை சீர்திருத்தம் செய்யப்படும்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற பேரில் ஜனநாயகத்துக்குச் சவக்குழி தோண்டும் முயற்சி நிறுத்தப்படும். உலகப் பொதுமறையான திருக்குறள், தேசிய நூலாக அறிவிக்கப்படும். ஒன்றிய அரசுப் பணித் தேர்வுகள், ஒன்றிய அலுவலகங்களில் தமிழ் மொழியில் பயின்ற நமது இளைஞர்களுக்கு இடம் உறுதிசெய்யப்படும். அதுமட்டுமல்ல, இந்த பகுதி மக்களுக்காக பொன்மலை இரயில்வே பணிமனையை இரயில் பெட்டித் தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்தூர் இரயில் நிலையம் முதல் பெரம்பலூர், அரியலூர் ரயில் நிலையம் வரை, புதிய அகல இரயில் பாதை அமைக்க ஆவன செய்யப்படும்.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்து, 13 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார். சென்ற மாதம் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்கள் கைது செய்யப்படுகிறார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவால்! அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இல்லையா இது? தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்து விட்டார்களே - மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்களே என்ற பயத்தில், தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்துகொண்டு வருகிறது, பா.ஜ.க. தலைமை!
தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்கு முன்பாக, நம்முடைய அமைச்சர் பொன்முடியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நான் வந்திருக்கிறேன்.
ஆளுநர் அவராகச் செய்தாரா! முடியாது என்று சொல்லிவிட்டார். நாங்கள் விடுவோமா… தி.மு.க.காரர்கள் நாங்கள். நீதிமன்றத்திற்குச் சென்றோம். உச்சநீதிமன்றத்தில் வாதம் நடந்தது. எப்படிப்பட்ட கண்டனத்தை ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி. அதற்குப் பிறகு, இன்றைக்கு மாலை 3.30 மணிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் நேரடியாகச் சென்று ராஜ்பவனில் பதவிப் பிரமாணத்தை முடித்துவிட்டு, ஒரு மரியாதைக்கு ஆளுநரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, புறப்படும்போது கூறினேன். இன்றைக்குத்தான் நான் தேர்தல் வேலையைத் தொடங்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினேன். அவர் உடனே, ”BEST OF LUCK” என்று சொல்லி அனுப்பினார்.
ராஜ்பவனிலிருந்து தொடங்கியிருக்கின்ற இந்தப் பயணம் குடியரசுத்தலைவர் மாளிகை வரைக்கும் செல்லப்போகிறது என்பது இது ஒரு அடையாளம். மக்களுக்கான சட்டங்களை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்துவார். நாம் ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
நேற்றும், இன்றைக்கும் போல், வரலாற்றில் வேறு எந்த ஆளுநரையாவது நீதிமன்றம் இப்படி கடுமையான கேள்விகள் கேட்டிருக்கிறதா? அப்படிப்பட்ட கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. மக்களை எதிர்கொள்ள பயப்படும் பா.ஜ.க. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் எதிர்கொள்வது கோழைத்தனம்! கோழைத்தனம்!
உங்களின் இந்த மிரட்டல் உருட்டல் அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது இந்தியா கூட்டணிக்கும் பாஜகவுக்குமான யுத்தம் அல்ல. இது இந்திய நாட்டு மக்களுக்கும் - பாசிச பா.ஜ.க.வுக்குமான யுத்தம்! இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். பாசிச பா.ஜ.க. வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும்.
தமிழ்நாட்டு மக்களை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி பேசலாம் என்பதில்தான், பா.ஜ.க.வை சேர்ந்தவர்களின் எண்ணம் முழுவதும் இருக்கிறது. பா.ஜ.க. மக்களிடமிருந்து சுரண்டுமே தவிர, மக்களுக்கு எதுவுமே தராது! அதனால்தான், மக்கள் இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும்போது, நம்முடைய நிதியில் இருந்தே நாம் தருகிறோம். அதையும் மனச்சாட்சியே இல்லாமல் கொச்சைப்படுத்தி, அதில் ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல்?
தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான நிதியை வரியாக வசூல் செய்கிறீர்கள்! அதிலிருந்து நியாயமான பங்கை ஏன் திருப்பிக் கொடுப்பதில்லை என்றுதானே கேட்கிறோம்! ஒரு ரூபாய் வசூல் செய்துவிட்டு, 29 பைசா மட்டும் திருப்பி கொடுப்பது நியாயமா? முறையா? தருமமா? என்று கேட்கிறோம். இதைக் கேட்டால், சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகச் சொல்கிறார்! மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சையாம். எவ்வளவு ஆணவம். எவ்வளவு வாய்க் கொழுப்பு. நிர்மலா சீதாராமன் அவர்களே… உங்கள் அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்துவீர்களா? பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா? மக்களுக்குக் கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல; அது அவர்களின் உரிமை.
மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது, அரசியலில் இருக்கும் நம்முடைய கடமை! அந்தக் கடமையைத்தான் தி.மு.க. அரசு சரியாக செய்துகொண்டு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்கிறீர்களே… தொழிலதிபர்கள் கூட்டத்தில் சென்று இப்படி பேசுவீர்களா? ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட வரி கட்டுகிறார்களே மக்கள்… அவர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதி அமைச்சர் பதவி?
பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய இந்த ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! இப்படிப்பட்ட எதேச்சாதிகார - சர்வாதிகார பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டில் இருக்கிற பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா? எங்காவது கண்டித்து அறிக்கை விடுகிறாரா?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சிறுபான்மையினர் நலன் பேசுகிறார் பழனிசாமி! அவரின் இருண்ட கால ஆட்சியை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டு இருப்பீர்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறார் பழனிசாமி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - கொடநாடு கொலை – கொள்ளை, தற்கொலை – மர்ம மரணங்கள் - பொள்ளாச்சி பாலியல் வன்முறை என்று பழனிசாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட பட்டியலே போடலாம்! ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, பா.ஜ.க.விற்கு பாதம்தாங்கியாக இருந்து, பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குச் செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்று, அதற்கு லாலி பாடியவர் பழனிசாமி.
இப்போது அதே பா.ஜ.க.வின் கதை – திரைக்கதை – வசனம் – டைரக்ஷனில் கள்ளக்கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். பழனிசாமி நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்! பா.ஜ.க.வின் பாசிச எண்ணங்களுக்கும் முடிவுரை எழுதப்படும். இதெல்லாம் நடப்பதற்கு, நம்முடைய இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க வேண்டும்! அப்போதுதான், நம்முடைய இந்திய நாட்டையும் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் - நாட்டின் பன்முகத் தன்மையையும் – சகோதரத்துவத்தையும் - காப்பாற்ற முடியும்!
இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பீர் என்று உங்களில் ஒருவனாக - உங்களுக்காகவே உழைத்த தலைவர் கலைஞரின் மகனாகக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்…
இதோ… திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்களையும் - பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, கே.என்.நேரு அவர்களின் மகன் அருண் நேரு அவர்களையும் – உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன். அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, உங்களுடைய குரலாக – உங்களுடைய பிரதிநிதிகளாக - இந்த இரண்டு இளம் சிங்கங்களையும், நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய ஜனநாயகக் கடமை உங்களுக்கு இருக்கிறது.
இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். புதிய ஆட்சியை ஒன்றியத்தில் அமைப்போம்! ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம்! ஏப்ரல் 19-ஆம் நாள் நீங்கள் அளிக்கின்ற வாக்கு புதிய இந்தியாவை உருவாக்கும் வாக்காக அமையட்டும்." என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
டாபிக்ஸ்