தமிழ் செய்திகள்  /  Elections  /  Can't Allot Bambaram Symbol To Mdmk - Election Commission Of India Reply! What Is Durai Vaikos Next Decision

MDMK: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம் பதில்! துரை வைகோவின் அடுத்த முடிவு என்ன?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 27, 2024 10:48 AM IST

MDMK: ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம் பதில்!
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம் பதில்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீருக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில்தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று மதிமுகவுற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று மதிமுகவின் வழக்கறிஞர் மின்னஞ்சலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை பதில் அளித்துள்ளது

மேலும் ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைப்பயிற்சியின்போது துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.

அதுபோல் இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சினை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். அதன்படி வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று (மார்ச் 27) ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel