தமிழ் செய்திகள்  /  Elections  /  Loksabha Election 2024: Allotment Of Trichy Lok Sabha Constituency To The Mdmk In The Dmk Alliance

Loksabha Election 2024: திருச்சியில் தொகுதியில் மதிமுக போட்டி! துரை வைகோ வேட்பாளரா?

Kathiravan V HT Tamil
Mar 18, 2024 01:15 PM IST

”Loksabha Election 2024: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்”

 வைகோ - ஸ்டாலின் இடையே ஒப்பந்தம்
வைகோ - ஸ்டாலின் இடையே ஒப்பந்தம்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில், நடைபெற  உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்  மற்றத்  தோழமைக்  கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 8.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக,  இந்த  நாடாளுமன்றத்  தேர்தலில் மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்றக்  கழகம் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவது என இன்று (18.3.2024)  தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வைகோ பேட்டி!

ஒப்பந்தத்திற்கு பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், திமுகவுடன் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு மதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூட திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்க உள்ளோம். பின்னர் பெரியார் சதுக்கம், அண்ணா சதுக்கம், கலைஞர் சதுக்கம் சென்று மரியாதை செலுத்துவோம். நாளைய தினம் தோழமை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம் என கூறினார். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகுதியில் மதிமுக சார்பில் ஈரோடு கணேச மூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக ஆதரவு உடன் ராஜ்யசபா எம்பி ஆனார். 

இந்த நிலையில் தற்போது மதிமுகவுக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகோவின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் அடுத்தாண்டு நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் ராஜ்யசபா சீட் தர திமுக தரப்பு வாய்மொழி உறுதி அளித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

திமுக கூட்டணி

திமுக கூட்டணியை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் புதியதாக இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாத நிலையில் ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

WhatsApp channel