தமிழ் செய்திகள்  /  Elections  /  Lok Sabha Election 2024, Background On Tenkasi Lok Sabha Constituency

HT Election Special: இரண்டு தலைகள் மோதல்.. தக்கவைக்குமா திமுக?. வரிந்து கட்டும் நாம் தமிழர்- தென்காசி தொகுதி களநிலவரம்!

Karthikeyan S HT Tamil
Mar 28, 2024 07:36 AM IST

Tenkasi Lok Sabha constituency: நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் சூழலில், குற்றால சாரல் வீசும் இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மக்களவைத் தொகுதி எம்.பி பதவியை யார் கைப்பற்ற போகிறார் என்பதை இந்த சிறப்பு தொகுப்பில் பார்ப்போம்..!

கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ராணி
கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ராணி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆளும் கட்சியான திமுக தலைமையிலான ஒரு அணியும், பிரதான எதிர்கட்சியான அதிமுக ஒரு அணியாகவும் இத்தேர்தல் களத்தை சந்திக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாமக, அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஓபிஎஸ் அணி உள்ளிட்டோருடன் இணைந்து தேர்தல் களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 40 வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது.

நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் சூழலில், குற்றால சாரல் வீசும் இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மக்களவைத் தொகுதி எம்.பி பதவியை யார் கைப்பற்ற போகிறார் என்பதை இந்த சிறப்பு தொகுப்பில் பார்ப்போம்..!

தென்காசி மக்களவைத் தொகுதி

தென்காசி மக்களவைத் தொகுதி 1957-ல் உருவாக்கப்பட்டது. தென்காசி, ராஜபாளையம், கடையநல்லூர், சங்கரன்கோவில் (தனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தென்காசி மக்களவைத் தொகுதி. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மூன்று முறையும், சிபிஐ 2 முறையும், திமுக, தமாகா தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அருணாசலம் 7 முறை தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அரசியல் கட்சிகளிடையே முக்கிய இடத்தை பெற்றிருந்தது. காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட தென்காசி தொகுதியில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டு துவங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 1998-ம் முதன் முதலாக போட்டியிட்டபோது அரசியல் முக்கியத்துவம் பெற்ற தொகுதியாக மாறியது. தொடர்ந்து 6 தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இத்தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார்.

முதல்முறையாக வெற்றி பெற்ற திமுக

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்றிருந்தது. திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 3,55,389 வாக்குகள் பெற்றிருந்தார். அமமுக சார்பில் போட்டியிட்ட பொன்னுத்தாய்க்கு 92,116 வாக்குகள் கிடைத்திருந்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மதிவாணன் 59,445 வாக்குகள் பெற்றிருந்தார்.

தற்போது வேட்பாளர்கள் யார்?

தென்காசி மக்களவைத் தனித் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் களம் காண்கிறார். பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட மதிவாணன் நாம் தமிழர் சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு தலைகள் மோதல்

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இதில், ஜான் பாண்டியன் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர்.கிருஷ்ணசாமி டிவி சின்னம் கிடைக்காததால் மீண்டும் இரட்டை இலை சின்னத்திலே களம் காண்கிறார். 

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்குகள், அமமுக இந்த முறை கூட்டணியில் இருப்பதால் தான் வெற்றி பெற்றுவிடுவேன் என்கிற முனைப்பில் ஜான் பாண்டியன் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். தென்காசி மக்கள் தனக்கு வாய்ப்பு தருவார்கள் என்ற நம்பிக்கையில் கிருஷ்ணசாமியும் தீவிரமாக வேலை செய்துவருகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆதரவில் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கும் ராணியும் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். நாம் தமிழரும் வெற்றிக்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தென்காசி தொகுதியில் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்க மக்களும் தயாராகி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel