HT MP Story: கம்யூனிஸ்ட்களின் கோட்டையான மதுரை மக்களவை தொகுதி? இந்த முறை யாருக்கு வாய்ப்பு!
”HT MP Story: இதுவரை நடந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா ஒருமுறை மட்டுமே வென்றுள்ள வினோத வரலாறும் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உண்டு”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தோம். அந்த வரிசையில் HT MP Story என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களின் பின்னணி குறித்து அலசுவோம்.
மதுரை தொகுதி
2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக மதுரை மக்களவைத் தொகுதி உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னதாக மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக மதுரை மக்களவை தொகுதி இருந்தது.
கம்யூனிஸ்ட்கள் கோட்டையாக இருந்த மதுரை
மதுரை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை 1950களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நூற்பு ஆலைகள் மற்றும் மில்கள் அதிகமாக செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளில் பணியாற்றுவோர் அதிகபட்சமாக கம்யூனிஸ்ட் இயக்கங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
மதுரையை 8 முறை கட்டி ஆண்ட காங்கிரஸ்
மதுரை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை இதுவரை நடந்த தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
திராவிட கட்சிகளின் வினோத வரலாறு!
இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை நடந்த தேர்தல்களில் தலா ஒருமுறை மட்டுமே மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வென்றுள்ளனர்.
1957ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி வெற்றி பெற்றார்.
1962 நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி, 1999 மற்றும் 2004 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பொ.மோகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றிக் கொடி நாட்டிய மு.க.அழகிரி!
2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மு.க.அழகிரி மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் முதல் திமுக எம்.பி என்ற பெருமையை பெற்றார்.
முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக!
2014ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் போட்டியிட்ட இரா. கோபால கிருஷ்ணன் வென்றதன் மூலம் மதுரை நாடாளுமன்றத் தொகுதியை அதிமுக முதல் முறையாக தன் வசப்படுத்தியது.
அமோக வெற்றி பெற்ற சு.வெ!
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் 4,47,075 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் 3,07,680 வாக்குகளை பெற்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85,747 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட அழகர் 85,048 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42,901 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த முறை யார்?
இந்த நிலையில் 2024 தேர்தல் களம் மதுரை மக்களவைத் தொகுதியில் அனலை கிளப்பி வருகிறது. கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி தோழமை இயக்கமான சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கே மீண்டும் சீட் கிடைக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
அதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட ராஜ் சத்யன் இந்த முறை விருதுநகர் தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைநேர மாற்றத்திற்கு இவை உட்படலாம் என்றும் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்.
தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனை விருதுநகர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சார்ந்த சமூகத்தினர் விருதுநகர் தொகுதியில் பரவலாக உள்ளதால் தேமுதிக விருதுநகரை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது நினைவுக்கூறத் தக்கது.
அதிமுக- தேமுதிக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஒருமுடிவுக்கு வராத நிலையில் ராஜ்சத்யன் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்வி பரவலாக உள்ளது.
திமுக சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்து பாஜகவுக்கு ஜம்ப் அடித்து அங்கிருந்து அதிமுகவுக்கு எகிறி உள்ள டாக்டர் சரவணன் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக வேலை செய்து வருகிறார்.
பாஜக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாக உள்ள மகாலட்சுமி அல்லது கூட்டணி கட்சியான தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி சார்பில் திருமாறன் ஜி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பாக அன்பரசி என்பவர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டாபிக்ஸ்