களத்தில் எதிரணி பவுலர்களை நிலைகுலைய செய்யும் புயல்..அதிரடி மன்னன் வீரேந்தர் சேவாக் பிறந்தநாள்
எந்த மாதிரியான மைதானமாக இருந்தாலும் சரி, எவ்வாறான ஆடுகளமாக இருந்தாலும் சரி என குறி என்பது ஒன்றுதான், அது மிரட்டல் அடி தான் என்கிற பாணியை கடைசி வரை பின்பற்றி களத்தில் எதிரணி பவுலர்களை நிலைகுலைய செய்யும் புயலாக இருந்தவர் அதிரடி மன்னன் வீரேந்தர் சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் தனக்கென அழியா புகழும், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயலாகவும் களத்தில் இருந்தவர் வீரேந்தர் சேவாக். இந்தியாவுக்காக மூன்று வகை கிரிக்கெட்டில் 1999 முதல் 2013 வரை 14 ஆண்டுகள் விளையாடிய இவர், இந்திய அணி உச்சக்கட்ட ஆதிக்கம் செலுத்தியபோது அணியில் இடம்பிடித்த வீரராக இருந்துள்ளார்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வென்ற உலகக் கோப்பையின் போதும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடம் பிடித்தபோதும் அணியில் இடம்பிடித்த முக்கிய வீரராக இருந்துள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியில் அறிமுகமாகி, வரலாற்றில் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக தன்னை தக்கவமைத்து கொண்டவராக இருந்துள்ளார் சேவாக். இவர் இந்திய அணியில் இருந்த காலகட்டத்தில் எந்த அணியை சேர்ந்த ஸ்டார் பவுலர்களாக இருந்தாலும் தனது அதிரடியால் பந்தை தொலைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைப்பவராக இருந்துள்ளார்.