‘தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு..’ ஆக்ரோஷம்.. அதுதானே.. அதேதான்; மேட்ச் முடிந்த பின்னர் சஞ்சு போட்ட போஸ்ட்!
மேட்ச் முடிந்த பின்னர் சஞ்சு போட்ட போஸ்டில் அவர் தான் ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்
டர்பனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து இருந்தார். அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடிய சஞ்சு சாம்சன், இதிலும் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது வீரராக இணைந்து இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
ஆக்ரோஷமாக விளையாடணும்
போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் போட்டி முடிந்து பேசும் போது, “ போட்டியின் மத்தியில்தான் எனக்கான நேரம் அமைந்தது. அந்த நேரத்தை நான் மிகவும் ரசித்து விளையாடினேன். நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசி வருகிறோம்.
மூன்று-நான்கு பந்துகளை விளையாடியவுடன், நீங்கள் பவுண்டரியைத் தேடுகிறீர்கள். நான் அதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. சில நேரங்களில் அது பலனளிக்கும். சில நேரங்களில் அது இல்லை. ஆனால் அது இன்று நன்றாக வேலை செய்தது மகிழ்ச்சி. தொடரை சரியான முறையில் ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது. தென்னாப்பிரிக்காவுக்கு அவர்களது இடம் என்பது சாதமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி" என்று பேசினார்.
முன்னதாக, முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன்ன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, 46 பந்துகளில் சதம் அடித்து, 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் அபார சதத்தால், இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை இந்திய ஸ்பின்னர் பதம் பார்த்தனர். இறுதியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடிய இந்திய அணி, 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன், போட்டிக்குப் பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தான் ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்திற்கு இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
இதனை பார்த்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், சஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஃபையர் எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். சர்பராஸ் கானும் சாம்சனை தன்னுடைய வாழ்த்துகளை எமோஜிகளாக பதிவிட்டு இருக்கிறார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான துருவ் ஜூரெல் "சேட்டா" என்று பதிவிட்டு இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால், இந்த போட்டி சாம்சனின் ஆட்டமாக அமைந்தது. இந்தியா 220 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா சாம்சன் மற்றும் திலக் வர்மாவின் கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் அந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியானது. கடைசி 6 ஓவர்களில் இந்திய அணி வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்