KKR vs RCB Preview: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டி! ஈடன் கார்டனில் இன்று சிக்ஸர் மழை
ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி உள்ளது. இன்றைய போட்டியில் தங்களது உள்ளூர் மைதானம் பெங்களுருவில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க கொல்கத்தா உள்ளூர் மைதானத்தில் ஆர்சிபி முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் 2024 தொடரின் 36வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதனத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கு முன் கொல்கத்தா 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 3வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 7 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் முதல் இடத்திலும் இருந்து வருகிறது.
இந்த போட்டி மாலை நேர போட்டியாக 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி களமிறங்கும்.
எடுப்பான பேட்டிங், எடுபடாத பவுலிங்குடன் ஆர்சிபி
ஆர்சிபி அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஆரம்பத்தில் கோலி மட்டும் பேட்டிங் நல்ல பார்மில் இருந்த வந்த நிலையில் தற்போது டூ பிளெசிஸ் தனது பார்மை மீட்டுள்ளார். பினிஷிங்கில் தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரட்டி வருகிறார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவிட்டாலும் ராஜத் பட்டிதார் ரன்குவிக்கும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். எனவே பேட்டிங்கில் எடுப்பாக இருந்தபோதிலும் போதிய அனுபவமின்மை காரணமாக பவுலிங்கில் எடுபடாத அணியாகவே ஆர்சிபி இருந்து வருகிறது. ரீஸ் டாப்லே, லாக்கி பெர்குசன் போன்றோர் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமலேயே இருந்து வருகிறார்கள். மேக்ஸ்வெல் மோசமான பார்ம் அணியின் ஆல்ரவுண்டர் இருப்பையும் இல்லாமல் செய்துள்ளது.
எனவே கொல்கத்தாவுக்கு எதிராக முழுமையாக பேட்டிங்கை நம்பி மட்டுமே களமிறங்க உள்ளது.
ஆல்ரவுண்டராக கலக்கும் நரேன்
கொல்கத்தா அணியும் கிட்டத்தட்ட ஆர்சிபி போல் பவுலிங்கில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் பேட்டிங்கில் கலக்கும் அணியாக இருந்து வருகிறது. ஸ்பின் ஆல்ரவுண்டரான நரேன் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.
இவர் தவிர ஓபனர் சால்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங் என பவர்புல் பேட்டர்கள் கொண்ட அணியாக கொல்கத்தா உள்ளது.
அதேசமயம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருந்து வருகிறார். எனவே அவரது தனது திறமையை நிருக்க வேண்டிய போட்டியாக உள்ளது.
பிட்ச் நிலவரம்
கொல்கத்தா ஆடுகளம் ஸ்பினுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்ற போதிலும் பேட்ஸ்மேன்கள் சரவெடி ஆட்டத்தை தொடரும் மைதானமாக இருந்து வருகிறது. பகல் நேர ஆட்டம் என்பதால் ஸ்விங் பெரிதாக இருக்காது எனவும் பேட்ஸ்மேன்கள் கொண்டாடும் பிட்சாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு இதுவரை
இந்த இரு அணிகளும் இதுவரை மோதிக்கொண்ட 33 போட்டிகளில் கொல்கத்தா 19, ஆர்சிபி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்ச ஸ்கோராக 222, ஆர்சிபி அதிகபட்ச ஸ்கோராக 213 ரன்கள் இருக்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கமே இந்த இரு அணிகளுக்கு இடையில்தான் நடைபெற்றது. அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மோதலாக இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் இருந்து வருகிறது.
அத்துடன் ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருக்கும் ஆர்சிபி அணிக்கு இனி வரும் அனைத்து போட்டிகளும் முக்கியமானதாக இருக்கிறது. ஏற்கனவே தங்களது உள்ளூர் மைதானம் பெங்களுருவில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க கொல்கத்தாவின் உள்ளூர் மைதானத்தில் ஆர்சிபி முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.