IPL 2024 Final,KKR vs SRH: பேட்டிங், பவுலிங்கில் முழுமையான ஆதிக்கம்! மூன்றாவது முறையாக சாம்பியன் ஆன கொல்கத்தா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2024 Final,kkr Vs Srh: பேட்டிங், பவுலிங்கில் முழுமையான ஆதிக்கம்! மூன்றாவது முறையாக சாம்பியன் ஆன கொல்கத்தா

IPL 2024 Final,KKR vs SRH: பேட்டிங், பவுலிங்கில் முழுமையான ஆதிக்கம்! மூன்றாவது முறையாக சாம்பியன் ஆன கொல்கத்தா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 27, 2024 05:34 PM IST

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என முழுமையான ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியன் ஆகியுள்ளது.

மூன்றாவது முறையாக சாம்பின் ஆன கொல்கத்தா
மூன்றாவது முறையாக சாம்பின் ஆன கொல்கத்தா (ANI)

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் அப்துல் சமாத்க்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டிருந்தார்.

சன் ரைசர்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. கொல்கத்தாவின் துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சீட்டுகட்டு போல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24, ஐடன் மார்க்ரம் 20 ரன்கள் அடித்தனர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனை புரிந்த சன் ரைசர்ஸ், ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்ததது மோசமான சாதனையை புரிந்தது.

கொல்கத்தா பவுலர்களில் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வைப்வ் அரோரா, சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கொல்கத்தா சேஸிங்

இதையடுத்து மிகவும் குறைவான ஸ்கோரை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதையடுத்து 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் அடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐபிஎல் பைனலில் மிகவும் அதிக பந்துகள் வித்தியாசத்தின் வென்ற அணி என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றது. அந்த அணிக்கு பவுலிங், பேட்டிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, தொட்டதெல்லாம் துலங்கும் ஆட்டமாக இந்த போட்டி அமைந்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 59 ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்கள் அடித்தனர். 

சென்னையில் இரண்டு பைனல்களில் விளையாடியிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரண்டிலும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

வெங்கடேஷ் ஐயர் அதிவேக அரைசதம்

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். பவுண்டரி, சிக்ஸர்கள் என சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக அதிரடியில் மிரட்டினர். சிறப்பாக பேட் செய்த அவர் 24 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

இதன் மூலம் ஐபிஎல் பைனலில் அதிவேக அரைசதம் அடித்ததில் சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர் ஆகியோருடன் இணைந்தார். இவர்கள் மூன்று பேரும் ஐபிஎல் பைனில் 24 பந்துகளில் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். -

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.