அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 26, 2024 04:50 PM IST

ஸ்பின் என்ற ஆயுதத்தை வைத்து இந்தியாவை காலி செய்த நியூசிலாந்து முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. அத்துடன் 70 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் வைத்து நியூசிலாந்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது இந்தியா.

அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா
அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா (PTI)

வரலாறு படைத்த நியூசிலாந்து

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் சுருட்டியது. நியூசிலாந்து ஸ்பின்னர் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து 255 ரன்களில் ஆல் அவுட்டாக, முதல் இன்னிங்ஸில் பெற்ற 103 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

கடினமான இந்த இலக்கை சேஸ் செய்த இந்தியா 245 ரன்களில் வீழ்ந்த நிலையில், 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து.

இத்தனைக்கும் அந்த அணியில் முக்கிய பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் இல்லை, புதிய கேப்டனாக டாம் லேதம் பொறுப்பேற்க, சமீபத்தில் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் கடினமான நிலையிலிருந்து மீண்டு சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது.

1955 முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துகொண்டிருக்கும் நியூசிலாந்து, 70 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது.

சுழலில் ஜாலம் செய்த சாண்ட்னர்

நியூசிலாந்து பெற்றிருக்கும் இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் இடம் கை ஸ்பின்னரான மிட்செஸ் சாண்ட்னர் தான். தனது சுழல் ஜாலத்தால் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் முதல் இன்னிங்ஸில் 7, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்களில் பங்களிப்பு அளித்த அவர் முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் எடுத்தார். எனவே சந்தேகமே இல்லாமல் அவர்தான் ஆட்டநாயகானாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து, முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஆகியோரின் சுழலில் சிக்கி 259 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சாண்ட்னரின் சுழலில் சிக்கிய நிலையில் 156 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியாவுக்கு கடினமான இலக்கு

இதைத்தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இன்றைய நாளில் கூடுதலாக 57 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து 359 ரன்கள் இந்தியாவுக்கு இலக்கை நிர்ணயித்தது.

பேட்டிங் செய்வதற்கு கடினமாக, ஸ்பின்னர்களுக்கு நன்கு பந்து திரும்பும் விதமாகவும் இருந்த ஆடுகளத்தில் இந்த கடினமான இலக்கை சேஸ் செய்த இந்தியாவுக்கு ஓபனர் ஜெயஸ்வால் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அரைசதமடித்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா 8, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தனர்.

முதல் இன்னிங்ஸை போலவே ஜடேஜா 42, வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள் அடித்து, கடைசி நேரத்தில் கொஞ்சம் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.

12 ஆண்டுகளுக்கு பின் தொடரை இழந்த இந்தியா

இந்தியாவை பொறுத்தவரை சொந்த மண்ணில் யாராலும் வெற்றியை அவ்வளவு எளிதாக தடுக்க முடியாத அளவில் வெற்றிகரமாக அணியாக வலம் வந்துள்ளது. கடைசியாக 2012இல் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார்.

இதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இழந்துள்ளது. இந்த முறை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா உள்ளார். இடைப்பட்ட காலத்தில் இந்தியா தொடர்ச்சியாக 18 தொடர்களை சொந்த மண்ணில் வென்றிருக்கிறது. இது ஒரு தனித்துவ சாதனையாக அமைந்துள்ளது.

ஸ்பின்னுக்கு சாதகமான இந்திய பிட்சில், ஸ்பின் பவுலரை வைத்து வெற்றி பெற்று தொடரையும் தன் வசம் ஆக்கியுள்ளது நியூசிலாந்து.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.