Mohammed Siraj: ‘வறுமை மட்டுமே சொத்து’ அப்பா ஆட்டோ.. அம்மா வீட்டு வேலை.. ஜெயித்த சிராஜ்!
‘பண்டிகைக்கு புத்தாடை போடுவதற்கு கூட செல்வாக்கு இல்லாத குடும்பத்தில், எப்படி தொழில் முறை கிரிக்கெட் கற்பது?’
ஐதராபாத் வீதிகளில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிய முகமது கவுசின் என்கிற ஏழைத் தொழிலாளியின் மகன் தான் முகமது சிராஜ். தந்தையின் ஊதியம் போதாது என்பதால், அவரது அம்மா ஷபானா பேகம், வீட்டு வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.
வறுமை மட்டுமே மிச்சம்
இப்படி தான் இருந்தது முகமுது சிராஜின் இளமைக் காலம். வறுமை, வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்கிற நிலையில் தான் முகமது சிராஜ் இளமை காலம் இருந்தது. எத்தனை வறுமை இருந்தாலும், அத்தனைக்கும் இடையே அவரிடம் இருந்த வளமை கிரிக்கெட் மட்டுமே. சிக்ஸர் அடித்தால் தான் கிரிக்கெட் வீரரரா, விக்கெட் எடுத்தால் இல்லையா? என்கிற கேள்வி, அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் ஒரு பவுளராக தன்னுடைய கிரிக்கெட் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்.
பண்டிகைக்கு புத்தாடை போடுவதற்கு கூட செல்வாக்கு இல்லாத குடும்பத்தில், எப்படி தொழில் முறை கிரிக்கெட் கற்பது? தெருவோர கிரிக்கெட்டில் இருந்த முகமது சிராஜிற்கு, 2015ல் ஒரு அற்புதம் நடந்தது. நண்பர் ஒருவர் மூலம் சார்மினார் கிரிக்கெட் க்ளப்பில் , அந்த க்ளப் வீரர்களுக்கு பந்து வீசினார் சிராஜ்.
வலை பயிற்சியில் கிடைத்த வாய்ப்பு
‘யார் இவன், இந்த போடு போடுறான்’ என அசந்து போன அந்த க்ளப், தங்கள் அணியில் உடனே சிராஜ்யை சேர்த்தது. அந்த போட்டியில் சிராஜ் 5 விக்கெட்டுகளை அள்ள, அதன் பின் சிராஜ் தலையெழுத்து மாறியது. 23வது வயதில் மாநில அணியில் இடம் பிடித்தார். சீனியர் அளவிலான மண்டல அணியில் அதற்க அடுத்த இடத்தை பிடித்தார்.
2015ல் ரஞ்சியில் ஒரு சீசனில் களம் இறங்கினார். அடுத்த சீசனில் 9 போட்டிகளில் ஆடி, 41 விக்கெட்டுகளை குவித்தார். அதற்கு அடுத்தடுத்த சீசன்களில் சிராஜ் ஒரு விக்கெட் டேக்கராக ஜொலிக்க, அதன் மூலம் கிடைத்த பணத்தில் தன் பெற்றோருக்கு வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
திறந்தது கதவு.. அதிர்ந்தது களம்!
சிராஜ் திறமையை கண்ட சன் ரைசர்ஸ் அணி, 2017 சீசனில் அவரை 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து, அவருக்கு சர்வதேச அரங்கிற்கான கதவை திறந்து வைத்தது. உள்ளூர் போட்டிகளில் சிராஜ் வீசிய வேகம், அதன் பின் தேசிய அணியில் இடம் பெறும் வாய்ப்பை தந்தது.
2017 ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான முகமது சிராஜ், வில்லயம்சன் விக்கெட்டை தூக்கி, எதிரணிக்கு வில்லனானார். அதன் பின் ஒரு நாள், டெஸ்ட் என இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய முகமது சிராஜ், வேகத்தில் எதிரணியை வேக வைக்கும் பூதமானார். இன்று இலங்கை அணியை துவம்சம் செய்த சிராஜ், கடும் முயற்சியால் இன்று இந்த இடத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரனா காலத்தில், இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது, தன்னுடைய தந்தை இறந்து போக, இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் நாட்டுக்காக ஆடியவர் சிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்