Gautam Gambhir: ‘I Am Back’! மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கெளதம் கம்பீர்
கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி வென்ற இரண்டு ஐபிஎல் கோப்பைகளையும் பெற்று கொடுத்தவர் கெளதம் கம்பீர். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அணியின் புதிய ஆலோசகராக மாறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளது. 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாக பட்டத்தை வென்றது கொல்கத்தா. இந்த அணி இரண்டு முறை கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்தவர் கெளதம் கம்பீர்.
2011 முதல் 2017 வரை 7 சீசன்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார் கம்பீர். இவர் கேப்டனாக இருந்தபோது கொல்கத்தா அணி 5 முறை ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது. 2018இல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை பெற்ற கம்பீர் பின்னர், 2022 ஐபிஎல் சீசனில் புதிய அணியாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பேக் கொடுத்து செயல்பட்டார்.
இதைத்தொடர்ந்து 2024 ஐபிஎல் சீசனில் கெளதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து கம்பீர், கொல்கத்தா பயிற்சியாளராக இருந்து வரும் சந்திபகாந்த் பண்டிட் உடன் இணைந்து செயல்படவுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்புவது பற்றி கம்பீர் கூறியதாவது: " நான் எமோஷனலான ஆள் கிடையாது. ஆனால் தற்போது வித்தியாசமான உணர்கிறேன். எங்கு தொடங்கினேனோ அங்கு மீண்டும் திரும்புகிறேன். மீண்டும் பர்பிள் மற்றும் கோல்டன் நிற ஜெர்சியை அணியவுள்ளேன். நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பவில்லை. மகிழ்ச்சி நிறைந்த நகரத்துக்கு திரும்புகிறேன். நான் திரும்ப வந்துட்டேன், எனது ஜெர்சி எண் 23" என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தற்போது அபிஷேக் நாயர், ஜேம்ஸ் போஸ்டர் ஆகியோர் உதவி பயிற்சியாளராக உள்ளார்கள். பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் உள்ளார். ரியான் டென் டோஸ்கேட் பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9