IPL Auction 2024: ஐபிஎல் மெகா ஏலத்தால் அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா.. காரணம் என்ன தெரியுமா?
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக பெர்த் டெஸ்டில் இருந்து பாதியிலேயே வெளியேற உள்ள உதவி பயிற்சியாளர் டேனியல் வெட்டோரிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூசிலாந்து ஜாம்பவானும், ஆஸ்திரேலியாவின் தற்போதைய உதவி பயிற்சியாளருமான டேனியல் வெட்டோரி ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டின் பாதியிலேயே வெளியேறுவார். ஐபிஎல் உரிமையாளரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் வெட்டோரி நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்திற்காக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவுக்கு செல்கிறார். முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் 22 ஆம் தேதி தொடங்கும் பெர்த் டெஸ்டின் முதல் நாள் மற்றும் 2 வது நாள் வரை ஆஸ்திரேலிய அணியுடன் இருக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் முழுநேர பதவியை வகித்த போதிலும், ஐபிஎல்லில் எஸ்.ஆர்.எச் மற்றும் ஹண்ட்ரடில் பர்மிங்காம் பீனிக்ஸ் ஆகியவற்றில் பொறுப்புகளை ஏற்க அனுமதிக்கப்பட்ட வெட்டோரிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக வெட்டோரி செயல்படுவதற்கு நாங்கள் மிகவும் ஆதரவாக இருக்கிறோம். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பு முதல் டெஸ்டுக்கான இறுதி தயாரிப்பை அவர் முடிப்பார். பின்னர் அவர் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் எஞ்சிய போட்டிகளில் அணியுடன் இருப்பார்.
வெட்டோரி 2022 முதல் அனைத்து வடிவங்களிலும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார், அவரது நீண்டகால நண்பரான ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் நெருக்கமாக ஒத்துழைத்தார்.