IND W vs UAE W: அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள்! ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி டி20யில் இந்திய மகளிர் மிக பெரிய வெற்றி
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகளை வீழ்த்தி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் இந்திய மகளிர் அணி தனது குரூப்பில் முதல் இடத்தில் உள்ளது. இதில் க்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி டி20யில் இந்திய மகளிர் மிக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மகளிர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் உள்ளன.
அதேபோல் குரூப் பி பிரிவில், இலங்கை, வங்கதேசம். தாய்லாந்து, மலேசியா மகளிர் அணிகள் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இந்திய மகளிர் தனது முதல் போட்டியிலேயே எதிரி அணியான பாகிஸ்தான் மகளிரை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இந்திய மகளிர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இந்திய மகளிர் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணியை எதிர்கொண்டது.
இந்தியா ரன் குவிப்பு
தம்புல்லாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
இந்திய மகளிர் அணியில் அதிரடி ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 64 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்டராக இருந்தார். தனது இன்னிங்ஸில் 12 பவுண்டர், ஒரு சிக்ஸர் அடித்தார். டி20 போட்டியில் இது ரிச்சா கோஷ் அடித்த முதல் அரைசதமாகவும் அமைந்துள்ளது.
அதேபோல் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டர், ஒரு சிக்ஸர் அடித்தார். ஓபனரான ஷெபாலி வர்மாவும் தன் பங்குக்கு அதிரடி காட்டி 18 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அவுட்டானார்.
ஐக்கிய அரபு அமீரகம் சேஸிங்
202 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய மகளிர் 78 ரன்கள் வித்தியாசத்தில் டி20 கிரிக்கெட்டில் மிக பெரிய வெற்றியை பெற்றதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
இந்திய மகளிர் பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரேணுகா சிங், தனுஜா கண்வார், பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
தனது குரூப்பி்ல அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை இந்திய மகளிர் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
ஹர்மன்ப்ரீத் கெளர் சாதனை
இந்த போட்டியில் பொறுப்புடன் பேட் செய்து அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார் ஹர்மன்ப்ரீத் கெளர். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 3415 ரன்கள் அடித்து அதிக ஸ்கோர் அடித்த இந்திய மகளிர் பேட்டர் என்ற ஸ்மிருத்தி மந்தனாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த போட்டியில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய ரிச்சா கோஷ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய மகளிர் தனது அடுத்த போட்டியில் நேபாளம் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தம்புல்லாவில் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/