உடல் முழுவதும் கண்களாக மாறிய இந்திரன்.. சாபம் கொடுத்த கெளதம முனிவர்.. விமோசனம் கொடுத்த வைத்தியநாத சுவாமி..!
Vaidyanathaswamy: சிறப்பு மிகுந்த கோயில்கள் திரும்பும் திசையெல்லாம் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்.
Vaidyanathaswamy: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றனர். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
உலகம் முழுவதும் உருவமற்ற லிங்க திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகின்றார். மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சென்ற இடமெல்லாம் மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து வழிபட்டுச் சென்றுள்ளனர்.
மண்ணுக்காக போரிட்டு எந்த இடத்தை எல்லாம் கைப்பற்றினார்களோ அந்த இடத்தில் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடுகளை நடத்தியுள்ளனர். பல வெளிநாடுகளில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் இருப்பதற்கு இதுதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் திரும்பும் திசையெல்லாம் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்.
தல சிறப்பு
வசிஷ்டர் முனிவர் இந்த இடத்தில் தங்கி இருந்து தவம் செய்துள்ளார் அதன் காரணமாக வசிட்டக்குடி என இந்த இடம் அழைக்கப்பட்டுள்ளது அதற்குப் பிறகு காலப்போக்கில் மருவி திட்டக்குடி என அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிவபெருமான் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள் புரிந்து வருகின்ற காரணத்தினால் இவருக்கு வைத்தியநாதர் என்ற திருநாமம் அமைந்துள்ளது.
தல வரலாறு
இந்திரன் ஒருமுறை கௌதம முனிவர் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய மனைவியான அகலிகையை பார்த்துள்ளார் அவர் மீது இந்திரன் ஆசை கொண்டுள்ளார். தனது குருவின் மனைவியை எப்படி அடைவது என்று நினைத்த இந்திரன் மிகப்பெரிய தண்டனையை அவரே பெற்றுக் கொண்டார்.
ஒரு நாள் அதிகாலை நேரத்தில் கௌதம முனிவர் அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்காக ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட இந்திரன் கௌதம முனிவரின் தோற்றத்தில் மாறி அகலிகை இருந்த ஆசிரமம் நோக்கி சென்றுள்ளார்.
இதனை கௌதம முனிவர் தனது ஞான திருஷ்டியில் உணர்ந்து கொண்டார். ஆசிரமத்தை அடைந்த கௌதம முனிவரைக் கண்டு அவரது உருவில் இருந்த இந்திரன் அவருடைய கண்ணில் படாதவாறு பூனையாக மாறி மறைந்து கொண்டார். இதனை கௌதம முனிவர் தனது ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டார்.
சிஷ்யர்களின் ஞானக்கண்ணை திறக்கும் ஆசானுக்கு குரு துரோகம் செய்துவிட்டாய். உனது கண்களில் கல்வியை விட காமம் நிறைந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட அயோக்கியன் உடல் முழுவதும் கண்ணாக மாற வேண்டும். அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படுகிறவன் எவ்வளவு கேவலமானவன் என இந்த உலகம் அறிய வேண்டும். உன் அங்கம் முழுவதும் கண்களாக மாறக் கடைவது என கௌதம முனிவர் இந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
இதனால் இந்திரனின் உடல் முழுவதும் ஆயிரக்கணக்கான கண்கள் வந்தன. தனது தவறை உணர்ந்த இந்திரன் உடலில் இருந்து அனைத்து கண்களின் வழியாகவும் கண்ணீர் விட்டு கதறினார். தனது மனைவியான அகலிகைக்கும் கல்லாக வேண்டும் என்ற சாபத்தை கௌதம முனிவர் கொடுத்தார்.
இந்த சாபத்திலிருந்து எனக்கு விமோசனம் கொடுங்கள் என மனமுருகி இந்திரன் வேண்டிக்கொண்டார். இந்த சாபத்தை சிவபெருமானால் மட்டும் தான் விமோசனம் கொடுத்து நிவர்த்தி செய்ய முடியும் என கௌதம முனிவர் கூறினார். இதன் காரணமாக பூலோகத்தில் இருந்த அனைத்து சிவபெருமான் கோயில்களுக்கு சென்று இந்திரன் வழிபாடு செய்து வந்தார்.
அதன் பின்னர் வசிஷ்ட முனிவர் பர்ணசாலை அமைத்து பன்னெடுங்காலமாக தவம் இருந்த கோயிலுக்கு இந்திரன் வந்தார். உடல் முழுவதும் கண்களோடு இருக்கும் இந்திரன் கண்ணீருடன் மனம் உருகி சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தார். நீண்ட கால தவத்தை கண்டு கொண்ட சிவபெருமான் இந்திரனுக்கு காட்சி கொடுத்தார்.
அதன் பின்னர் இந்திரனுக்கு சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்தார். மேலும் இங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் என்னைப் போலவே நோயிலிருந்து விடுபட வேண்டும் எனவும் அதனை தாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமென இந்திரன் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். அப்படியே ஆகட்டும் என சிவபெருமான் அருள் வழங்கினார். அதன் காரணமாகவே இங்கு வரக்கூடிய அனைவருக்கும் தீராத நோயும் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது. அதனால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் வைத்தியநாத சுவாமி என அழைக்கப்படுகிறார்.