Ponmudi Vs RN Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?-why was ponmudi transferred to the forest department a look into the ministers background - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ponmudi Vs Rn Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

Ponmudi Vs RN Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

HT Tamil HT Tamil
Sep 29, 2024 04:10 PM IST

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்னும் ஆர்.என்.ரவி மாற்றபடுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படாத நிலையில் மத்திய அரசு உடன் சுமூக உறவை பேண பொன்முடிக்கு வனத்துறையை கொடுத்து வனவாசத்திற்கு தலைமை அனுப்பி உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழத்தொடங்கி உள்ளது.

Ponmudy Vs RN Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?
Ponmudy Vs RN Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். 

செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பிடித்து உள்ளனர். இது மட்டுமின்றி அமைச்சர்களின் இலாகாகளும் மாற்றப்பட்டு உள்ளன.

1989ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் அமைச்சரவையில் பொன்முடிக்கு இடம் நிச்சயமாக இருக்கும். மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை, உயர்கல்வித்துறை, கனிமவளத்துறை ஆகிய பொறுப்புகளை வகித்து அனுபவம் பெற்ற பொன்முடிக்கு வனத்துறை அமைச்சர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது உற்று நோக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. 

முனைவர் பட்டம் பெற்ற பொன்முடி பேராசிரியர் ஆக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2006-2011 திமுக அமைச்சரவையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கல்வித்துறையை கொடுத்த போது, ‘எனக்கு இருக்கும் தகுதிக்கும் அனுபவத்திற்கும் கல்வித்துறையை மொத்தமாக தராமல், இரண்டாக பிரித்து ஒருபாதியை தருவதா?’ என தலைமையிடமே கேள்வி எழுப்பியவர் பொன்முடி. 

முதலமைச்சர் ஆக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மீண்டும் உயர்கல்வித்துறை கொடுக்கப்பட்டது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இவருக்கும் நேரடி சமர் தொடங்கிவிட்டது எனலாம். பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் பேசும் கருத்துக்களுக்கு தனது பாணியில் பதிலடி கொடுக்கத் தொடங்கினார். பல்கலைக்கழங்களுக்கு ஆளுநரே வேந்தர் என்பதால் உயர்கல்வி துறையை நிர்வாகம் செய்வதில் ஆளுநருக்கும் - பொன்முடிக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 

இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தனது பதவியை இழந்த நிலையை உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்புக்கு தடைபெற்று மீண்டும் அமைச்சரவைக்குள் ரீஎண்ட்ரி கொடுத்த பொன்முடிக்கு மேலும் ஒரு மாற்றமாக வந்து உள்ளது வனத்துறை. 

தமிழக அமைச்சரவையில் தலித்துக்களுக்கு போதய பிரதிநிதித்துவம் இல்லை. அப்படியே இருந்தாலும் பணம் கொழிக்கும் துறைகள் தலித் அமைச்சர்களிடம் இல்லை என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டு வரும் வேளையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமாவளவன் போட்டு டெலிட் செய்த ட்வீட் திமுக தலைமையை சற்று பதம் பார்த்தன் விளைவும், ஆளுநர் உடனான பிரச்னைகளை தீர்க்கும் வெளிப்பாடாகவும்தான் பொன்முடிக்கு இலாகா மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முனைவர் பட்டம் பெற்றவரும் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்தவருமான கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை இலாகா செல்கிறது. காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு உயர்கல்வித்துறையை கொடுத்து இருப்பதன் மூலம் தலித் எதிர்ப்பு விமர்சனங்களுக்கு திமுக பதிலடி தர விரும்புகின்றது. 

அதே வேளையில் ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்னும் ஆர்.என்.ரவி மாற்றபடுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படாத நிலையில் மத்திய அரசு உடன் சுமூக உறவை பேண பொன்முடிக்கு வனத்துறையை கொடுத்து வனவாசத்திற்கு தலைமை அனுப்பி உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழத்தொடங்கி உள்ளது. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.