Thanga Tamil Selvan: ’தங்க தமிழ்ச்செல்வன் மகளின் திருமணத்தை புறக்கணித்த முதல்வர்! ’ஓபிஎஸ்தான் காரணமா?
”தங்கத்தமிழ் செல்வனின் கட்சி செயல்பாடுகளில் ஏதெனும் பிரச்னைகள் உள்ளதா அல்லது தனது மகளின் திருமண அழைப்பிதழை ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து கொடுத்தது காரணமா என பல்வேறு ஊகங்கள் திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது”
வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று தேனியில் நடைபெற உள்ள திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளரான தங்கத் தமிழ்ச் செல்வன் இல்லத் திருமண விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லமாட்டார் என்ற தகவல் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தங்கத் தமிழ்ச்செல்வன்
தேனி மாவட்ட அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிறகு செல்வாக்கு மிக்க நிர்வாகியாக இருந்தவர் தங்கத் தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக மாறிய அவர் அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக மாறினார். டிடிவி தினகரனுக்காக தனது எம்.எல்.ஏ பதவி வரை இழந்த அவர் பின்னர் அவருடனே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் திமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பையும் தங்கத் தமிழ்ச் செல்வன் இழந்து இருந்தார்.
மகளின் திருமணம்
தங்கத் தமிழ்ச்செல்வனின் மகள் சாந்தியின் திருமணம் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கம்பத்தில் உள்ள பி.எல்.ஏ திடலில் நடைபெறுகிறது.
தனது மகளின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்தினருடன் சந்தித்த தங்கத் தமிழ்ச் செல்வன் அழைப்பிதழையும் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் தங்கத் தமிழ்ச் செல்வன் இல்லத் திருமண விழாவை திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை ஏற்று நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மதுரை செல்லும் முதலமைச்சர் தேனி செல்லாதது ஏன்?
இன்று மதுரை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தென் மண்டல வார்டு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
மறுநாளான ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டிலும் முதலமைச்சர் உரை நிகழ்த்துகிறார்.
இந்த ஒருநாள் இடைவெளியில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று தங்கத்தமிழ்ச் செல்வனின் இல்லத் திருமண விழா நடைபெறுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வந்து விமானம் மூலம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ள முதலமைச்சர் ஏன் அண்டை மாவட்டமான தேனியில் நடக்கும் கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச் செல்வனின் இல்லத் திருமணவிழாவுக்கு செல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஓபிஎஸ் தான் காரணமா?
தங்கத்தமிழ் செல்வனின் கட்சி செயல்பாடுகளில் ஏதெனும் பிரச்னைகள் உள்ளதா அல்லது தனது மகளின் திருமண அழைப்பிதழை ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து கொடுத்தது காரணமா என பல்வேறு ஊகங்கள் திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது.
முதலமைச்சர் செல்லவில்லை என்றாலும் அவருக்கு பதிலாக மகனும் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை அனுப்புவது வழக்கம் என்றாலும், அவரையும் திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நடத்தி வைக்கும் திருமண நிகழ்ச்சிக்கு கட்சியின் முதன்மை செயலாளரான கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, சக்ரபாணி, மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்துகின்றனர்.
உளவுத்துறை சொன்ன அதிர்ச்சி தகவல்
தங்கத் தமிழ்ச்செல்வன் முறைப்படி அழைத்தும் முதலமைச்சர் ஏன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் உளவுத்துறை தந்த தகவல்தான் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று தேனியில் தங்கத்தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழா நடைபெறும் அதே நாளில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் பொன்விழா மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.
இதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் மதுரைக்கு வர உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து தேனி வழியாக சாலை மார்க்கமாக செல்வது சரியாக இருக்காது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை அதிமுகவினர் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதாலும் முதலமைச்சர் தேனி செல்லும் பயணத்தை தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனாலேயே உதயநிதி ஸ்டாலினும் தேனி செல்வதை தவிர்த்துள்ளார். அதோடு 20ஆம் தேதி அன்று நீட் தேர்வுக்கு எதிராக ஆளுநரை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்திலும் உதயநிதி பங்கேற்க வேண்டி உள்ளதால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டாபிக்ஸ்