M. C. Rajah : யார் இந்த எம்சி ராஜா; அம்பேத்கருக்கு முன்பே இவர் செய்த காரியம் என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  M. C. Rajah : யார் இந்த எம்சி ராஜா; அம்பேத்கருக்கு முன்பே இவர் செய்த காரியம் என்ன?

M. C. Rajah : யார் இந்த எம்சி ராஜா; அம்பேத்கருக்கு முன்பே இவர் செய்த காரியம் என்ன?

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 17, 2023 10:27 AM IST

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவா என்று குழந்தைகளுக்கு சொல்லித்தந்த எத்தனை பெற்றோருக்கு தெரியும் அதை எழுதி எம்.சி.ராஜாவையும் அவர் ஆற்றிய சமூகப்பணியையும் அதுகுறித்து இங்கு பார்க்கலாம் வாங்க

அம்பேத்கர் - எம்.சி.ராஜா
அம்பேத்கர் - எம்.சி.ராஜா

எம்.சி.ராசா

மயிலை சின்னத்தம்பி பிள்ளை என்பவரின் மகன் ராஜா என்பதே எம்.சி.ராஜா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

ராவ் பகதூர் எம்.சி. ராஜா என அழைக்கப்படும் இவர் 17 ஜூன் 1883 ல் சென்னையில் பிறந்தார்.

பணி

பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தாமோதர் பஞ்சமர் பாடசாலையில் முதன்மை ஆசிரியராக பணியை தொடங்கினார். அதே சமயம் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தார்.

அரசியல்

நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததோடு அதன்மூலம் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வந்தார். இதைத்தொடர்ந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு பட்டியல் இனத்திலிருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சென்னை மாகாண சட்ட மன்றத்தின் துணை தலைவராகவும் பணியாற்றினார். இதையடுத்து அன்றைய நாட்களில் மைய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்பினரானவர். தற்காலிக சபாநாயகராக சில காலம் செயல்பட்டார்.

ஆதிதிராவிடர் பெயர் வரலாறு

பஞ்சமர், பறையர் என்று அழைக்கப்படுபவர்களை ஆதிதிராவிடர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று முதல் முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த வகையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைக்கப்படும் துறையின் முன்னோடிகளில் ஒருவர் எம்.சி.ராஜா. அன்றைய நாளில் ஆலய நுழைவு மேம்பாட்டு மசோதாவை ஆதரித்தார். மேலும் பொது இடங்களில் ஆதிதிராவிடர்களை அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அயோத்தி தாசர் மறைவிற்கு பின் ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தை தொடங்கி அந்த மக்களின் வாழ்வில் மேன்மையை கொண்டு வர பாடுபட்டார்.

அம்பேத்கருக்கு முன்பே

அம்பேத்கருக்கு முன்பே ஆங்கிலேய அதிகாரிகளை சந்தித்தித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்து வலியுறுத்தியவர் எம்.சி.ராஜா. லண்டனுக்கு சென்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கோரிக்கைகளை முன் வைத்தார். ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்ற புத்தகத்தின் வாயிலாக அம்மக்களின் வாழ்வின் அவலத்தை ஆங்கிலேயர்களுக்கு விளக்கினார்.

இதன் தாக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொழிலாளர் துறையை பிரிட்டீஸ் அரசு உருவாக்கியது. அதில் ஆலோசகராக இருந்த எம்.சி.ராஜாவின் முயற்சியால் தொழிலாளர் பள்ளி உருவாக்கப்பட்டது. அங்குதான் நீதிக்கட்சி ஆட்சி மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்து இன்று காமராஜர், எம்.ஜியார், ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் என யாராலும் தவிர்க்க இயலாத திட்டமாக படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா

சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழுவில் இரண்டு முறை இடம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நுழைய ஆதிதிராவிடர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிர்த்து போராடி வெற்றி கண்டார்.

நீதிக்கட்சியில் இருந்து விலகல்

நீதிக்கட்சி முன்னேற்றத்திற்காக போராடிய எம்.சி ராஜா தமிழகத்தின் முதல் தொழிலாளர் போராட்டமான பின்னி மில் போராட்டத்தை திருவிக உள்ளிட்டோர் தலைமையேற்று போராடியபோது ஒடுக்கப்பட்ட மக்கள் அதை புறக்கணித்தனர். இதற்கு எம்.சி ராஜாவும் ஒரு முக்கிய காரணம். இதையடுத்து ஏற்பட்ட சாதிய மோதலைத்தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் சென்னை புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டனர். இதற்கு நீதிக்கட்சியே காரணம் என குற்றம் சாட்டி அதிலிருந்து விலகினார்.

எம்.சி ராஜாவை ஆதரித்த பெரியார்

நீடா மங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டமக்கள் அனுமதிக்கப்படாமல் தாக்கப்பட்டபோது எம்.சி ராஜா குரல் கொடுக்க வேண்டும் என்று பெரியார் எழுதினார். எம்.சி.ராஜாவின் ஒரு எழுத்தை கூட காங்கிரஸ் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார். எம்.சி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற பெரியார் வலியுறுத்தினார்.

அம்பேத்கருடன் நட்பும் முரணும்

லண்டனில் நடந்த வட் ட மேஜை மாநாட்டில் எம்.சி.ராஜாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அம்பேத்கருக்கும், இரட்டை மலை சீனிவானுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் எம்.சி ராஜா தன்னை எதிர்த்ததாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் உரிமையை தொடக்கத்தில் ஆதரித்த எம்சி.ராஜா வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்திய போது எதிர்த்தார். பொது வாக்காளர் தொகுதி என்ற காந்தியின் நிலைபாட்டை ஆதரித்தார்.

பின்னாளில் பூனா ஒப்பந்த காலகட்டதில் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்ட எம்.சி.ராஜா அம்பேத்கர் பிறந்த நாளில் அவரை பாராட்டி பேசி உள்ளார்.

மூஞ்சேவுடன் உடன்பாடு

இந்துமகா சபை தலைவர் மூஞ்சேவுடன் உடன்பாடு செய்து கொண்டார்.

கல்வி

நண்பர் பழனிச்சாமியுடன் இணைந்து ஆதிதிராவிடர்கள் விடுதி ஒன்றை தொடங்கி நடத்திவந்தார். அது இன்று சென்னை சைதா பேட்டையில் எம்.சி.ராஜா மாணவர் விடுதி என்ற பெயரில் தமிழக அரசரால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாரணர் படையை முதல் முதலாக தொடக்கினார். அதுமட்டும் இல்லாமல் ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து கிண்டர் கார்டன் ரூம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதன் 3ம் பதிப்பு 1930ல் வெளியானது. மேலும் சாய்ந்தாடம்மா சாந்தாடு, கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவா, காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா என இன்றைக்கும் நாம் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் பாடல்களை எழுதி வெளியிட்டார்.

ஆகஸ்ட் 23, 1943ல் ராஜா சென்னை பரங்கிமலையில் ராஜா தெருவிலிருந்த தனது வீட்டில் காலமானார்.

இப்படி வாழ்நாள் முழுவதும் கல்வி, தீண்டாமை, ஆலைய நுழைவு போராட்டம், ஆதிதிராவிடர் மேம்பாடு என்று இன்றைய தமிழக வளர்ச்சிக்கு வித்திட்ட ஆயிரக்கணக்கான தலைவர்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடைசிவரை போராடிய எம்.சி.ராஜா பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.