Weather Update: ’வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்! மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
”தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்”
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறி உள்ள வானிலை ஆய்வு மையம், 20.04.2024 முதல் 23.04.2024 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறி உள்ளது.
24.04.2024 முதல் 26.04.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3'-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
21.04.2024 முதல் 24.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
ஈரப்பதம்
20.04.2024 முதல் 24.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும் மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-55 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
20.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20.04.2024: கர்நாடக கடலோரப்பகுதிகள், வட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-
தண்ணீர்
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
- வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
- தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
உணவு
- லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
- தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
- வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
ஆடை
- வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
- தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
- வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
- சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
- தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
- வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.
டாபிக்ஸ்