தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fact Check : 'மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

Fact Check : 'மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

Fact Crescendo HT Tamil
May 22, 2024 12:46 PM IST

Fact Check : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஐபிஎல் போட்டியை பார்த்தது தான் தோல்விக்குக் காரணம் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் நடந்தது என்ன?

'மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? உண்மை என்ன?
'மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

உண்மைப் பதிவைக் காண:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியைக் காணும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “#CSK எப்போ எங்க தோத்தது தெரியுமா ? பீடை…பீடை…..பீடை…. குடும்பம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இந்த போட்டியை பார்த்தது தான் தோல்விக்குக் காரணம் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடைசி சுற்று ஆட்டம் பெங்களூருவில் நடந்தது. அந்த போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.

அப்படி இருக்கும் போது இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய factcrescendo ஆய்வு செய்தது. இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியுள்ளனர். அப்போது 2023 ஏப்ரல் மாதம் சென்னை அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் நடந்த போட்டியை ஸ்டாலின் பார்த்ததாக இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண

அந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்ற தகவலும் நமக்குக் கிடைத்தது. ஜீ நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில், “சென்னை அணியின் வெற்றியைக் கண்ட பிறகு நிச்சயம் மகிழ்ச்சியுடன் அவர் வீடு திரும்பியிருப்பார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, 2023 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சாம்பியன் பட்டம் வென்றது.

மு.க.ஸ்டாலின் ஐபிஎல் போட்டியைப் பார்த்த இந்த புகைப்படம் 2023ல் எடுக்கப்பட்டது. அந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டின் சாம்பியன் பட்டமும் சென்னை தான் வென்றது. அப்படி இருக்க மு.க.ஸ்டாலினின் துரதிர்ஷ்டம் காரணமாக சென்னை அணி தோற்றது என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. factcrescendo ஆய்வில் இந்த புகைப்படம் 2024 சென்னை – பெங்களூரு அணிக்கு இடையேயான போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

 

மு.க.ஸ்டாலின் ஐபிஎல் போட்டியைப் பார்த்த இந்த புகைப்படம் 2023ல் எடுக்கப்பட்டது
மு.க.ஸ்டாலின் ஐபிஎல் போட்டியைப் பார்த்த இந்த புகைப்படம் 2023ல் எடுக்கப்பட்டது

முடிவு

சிஎஸ்கே அணி தோல்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியை காண நேரில் வந்தது தான் காரணம் என்று பகிரப்படும் புகைப்படம் 2023ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும் அந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றது என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.

எனவே, வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் Factcrescendo-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்