Vanathi Srinivasan: கர்நாடக வெற்றியை வைத்து பாஜகவை வீழ்த்தலாம் என ராகுல் கனவு கண்டால் பலிக்காது - வானதி சீனிவாசன்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vanathi Srinivasan: கர்நாடக வெற்றியை வைத்து பாஜகவை வீழ்த்தலாம் என ராகுல் கனவு கண்டால் பலிக்காது - வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan: கர்நாடக வெற்றியை வைத்து பாஜகவை வீழ்த்தலாம் என ராகுல் கனவு கண்டால் பலிக்காது - வானதி சீனிவாசன்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 05, 2023 03:31 PM IST

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அடிப்படை வசதிகளான வீடுகள், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்டவை குறுகிய காலத்தில் மக்களை சென்றடைந்துள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம், முன்னேற்றம், வளர்ச்சிகளை எடுத்துரைத்து வருகிறோம். ஒவ்வொரு தரப்பினருக்கும் சிறப்பான ஆட்சியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அடிப்படை வசதிகளான வீடுகள், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்டவை குறுகிய காலத்தில் மக்களை சென்றடைந்துள்ளது.

48 கோடி மக்கள் முதன் முறையாக வங்கி கணக்குகளை துவக்கியுள்ளனர்.

இதனால் மக்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால், அது முழுமையாக செல்ல வங்கி கணக்கு உதவியாக உள்ளது. சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியதன் மூலம் நடுத்தர குடும்ப பெண்கள் தொழில் முனைவோராக மாற உதவியுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தியதால், அவர்களின் உடல் நலன் முன்னேறியுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டில் ஸ்மார்ட் சிட்டி மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் தருவதால், அவர்கள் கடன் வாங்குவது குறைந்துள்ளது. விவசாயிகள் ஆன்லைன் வர்த்தகம் செய்ய மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பாஜக ஆட்சியில் குறைந்த பட்ச ஆதார விலை நெல்லுக்கு 56 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டியில் ஆரம்பத்திலிருந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டது. நாட்டின் 35 சதவீத ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக உருவாகியுள்ளது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பீடு மாறியுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.

ரயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. ஒடிசா இரயில் விபத்து துரதிஷ்டவசமானது. இதேபோன்ற விபத்துகள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. பாதுகாப்பான ரயில் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இச்சம்பவம் குறித்து சிபிஐ‌ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு எதையும் மூடி மறைக்கவில்லை. யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜகவை வீழ்த்துவோம் என ராகுல் காந்தி 9 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அதன்படி எந்தளவு பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது? கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து பாஜகவை வீழ்த்தலாம் என ராகுல் கனவு கண்டால் பலிக்காது. வெளிநாட்டில் ராகுல்காந்தி நமது நாட்டிற்கு எதிராக பேசி வருகிறார். நாட்டின் ஜனநாயக தன்மை, கெளரவம் சிதைக்கும் வகையில் அவர் பேசி வருகிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் திமுக தமிழகத்தின் நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை வரக்கூடிய காலத்தில் பார்ப்போம்.

தமிழகத்திற்கு அதிக முதலீடு வந்தால் பாஜக ஆதரிக்கும். ஆனால் துபாய் சென்று விட்டு சொன்ன முதலீடுகள் இதுவரை எந்த தகவலும் இல்லை. விளம்பர பலகைகள் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ளனர். புதிதாக திமுக ஆட்சி வந்த பிறகு விளம்பரப் பலகைகள் அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதும் உள்ளது. விளம்பர பலகை விவகாரத்தில் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.