தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Vaiko Urges Tn Govt To Stop Construction Of Barrages Across Kosasthalai River

Kosasthalai River: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்ட வைகோ எதிர்ப்பு

Karthikeyan S HT Tamil
Aug 17, 2022 07:12 PM IST

கொசஸ்தலை ஆற்றில் இரண்டு அணைகளை கட்ட ஆந்திர மாநிலம் முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து உருவாகும் கொசஸ்தலை ஆறு, ஆந்திர பகுதியான நகரி வழியாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சிவாடா, ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரிக்கு வந்தடைகிறது. 

சென்னை நகருக்குள் 16 கி.மீ. தொலைவிற்கு ஓடும் இந்த ஆறு எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது. வேலூர், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் நீர்பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக கொசஸ்தலை ஆறு விளங்கி வருகிறது. ஆந்திர மாநில அரசு ஏற்கனவே சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் கொஸ்தலை ஆற்றுக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடுத்து தேக்கிவிட்டது.

தற்போது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேலும் இரண்டு புதிய தடுப்பு அணைகள் கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு ரூ.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆந்திர மாநிலம் கத்திரிப்பள்ளி என்ற இடத்திலும், மற்றொன்று நகரி மண்டலம் மொக்கலகண்டிகை என்ற இடத்திலும் கட்டப்பட உள்ளன.

கத்திரிப்பள்ளி பகுதியில் கட்டப்படும் அணைக்கு ரூ.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 500 ஏக்கரில் அணையைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று மொக்கலகண்டிகை என்ற இடத்தில் அமையும் அணை 420 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதற்கு ரூ.72.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்ட பிறகு 4,428 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், கத்திரிப்பள்ளி தடுப்பு அணை மூலம் 4,629 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்றும் ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அணை கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கிருஷ்ணாபுரம் பகுதியில் தடுப்பு அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு வரும் நீரைத் தடுத்துவிட்ட ஆந்திர மாநில அரசு, தற்போது மேலும் இரண்டு தடுப்பு அணைகளைக் கட்டுவதற்கு திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தத் தடுப்பு அணைகள் கட்டப்படுமானால், தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர்கூட கிடைக்காது. இதனால் வேலூர், திருவள்ளூர் மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும். நிலங்கள் வறண்டு போகும் நிலை உருவாகும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டுவிடும்.

கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் 8 ஊராட்சிகளில் மட்டுமே பாய்கிறது. இந்த ஆற்றின் தண்ணீரை திருப்பிவிட மேலும் இரண்டு அணைகளை கட்ட ஆந்திர மாநிலம் முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்