CM Stalin tribute :பிரேமா சீனிவாசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்!
டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரேமா சீனிவாசன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை : பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழும தலைவருமான வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா ஸ்ரீனிவாசன் சென்னையில் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது உடல் சென்னை அடையாறு க்ளப் கேட் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று காலை பெசன்ட் நகர் மயானத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் மதிப்புறு தலைவர் திரு. வேணு சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி. பிரேமா சீனிவாசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
போற்றி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் திரு. வேணு சீனிவாசன் மற்றும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரேமா சீனிவாசன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் டிவிஎஸ் குடும்பத்திற்கு மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு , மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.